கர்நாடகத்தில் பாஜகவை புரட்டிப் போட்ட காங்கிரஸ்.. மாபெரும் வெற்றி!
பெங்களூர்: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது.
மொத்தமுள்ள 223 தொகுதிகளில் அந்தக் கட்சி 121 இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதன்மூலம் 7 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது காங்கிரஸ்.
2004ம் ஆண்டு தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் தேவ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளமும் காங்கிரசும் இணைந்து ஆட்சியமைத்தன. காங்கிரஸ் சார்பில் தரம்சிங் முதல்வரானார்.
ஆனால், தேவ கெளடா தந்த தொல்லையால் அந்தக் கூட்டணி முறிந்தது. இதையடுத்து பாஜகவும் மதசார்பற்ற ஜனதா தளமும் இணைந்து ஆட்சி அமைத்தன. குமாரசாமி முதல்வரானார். ஆனால், தனது பதவிக் காலம் முடிந்து முதல்வர் பதவியை பாஜகவின் எதியூரப்பாவிடம் தர குமாரசாமி மறுத்ததையடுத்து 2007ம் ஆண்டு ஆட்சியைக் கவிழ்த்தது பாஜக.

இதையடுத்து நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. ஆனால், மெஜாரிட்டி கிடைக்கவில்லை. எதியூரப்பா முதல்வரானார். இதையடுத்து 'ஆபரேசன் கமலா' என்னொரு அராஜகத்தை நடத்தி பல்வேறு கட்சிகளில் இருந்தும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியது. இது தான் பாஜகவின் முதல் தவறு.
இதைத் தொடர்ந்து பாஜக ஆட்சிக்கு ஏராளமாக செயலவு செய்த ரெட்டி சகோதரர்களின் அராஜகம் ஆரம்பித்தது. மாநிலத்தின் கனிம வளத்தை சுரண்டி கொள்ளையடித்தனர். இதனால் அவர்கள் மீது வழக்குப் பாய்ந்தது.
இதற்கிடையே எதியூரப்பாவுக்கு ரெட்டிகளிடமிருந்து எதிர்ப்பு ஆரம்பித்தது. இதனால் ஆட்சி தள்ளாடியது. ஆனாலும் அதை எதியூரப்பா சமாளித்தார். இதைத் தொடர்ந்து பாஜக அமைச்சர்கள், எதியூரப்பா, அவரது குடும்பத்தினர் வரிசையாக நில மோசடி வழக்குகளில் சிக்கினர். மாபெரும் ஊழல்கள் நிறைந்த ஆட்சியாக எதியூரப்பா அரசு மாறியது.
எதியூரப்பாவில் ஆரம்பித்து ரெட்டிகள், அமைச்சர்கள் என பலரும் சிறைக்குச் சென்றனர்.
இதனால் அவரை ஆட்சியை விட்டு பாஜக நீக்க வேண்டிய நிலை வந்தது. ஆனால், பாஜக அவரிடம் பணிந்து நடந்து கொண்டது. அவர் சொன்னபடி சதானந்த கெளடாவை முதல்வராக்கியது. பின்னர் அவரை நீக்க வைத்த எதியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்கினார்.
பின்னர் தனக்கு மீண்டும் முதல்வர் பதவி கேட்டார் எதியூரப்பா. இந்த முறை பாஜக தலைமை பணியவில்லை. கட்சியின் மாநிலத் தலைவர் பதவியைக் கேட்டார். அதையும் தர பாஜக தலைமை மறுக்கவே கர்நாடக ஜனதா கட்சியை ஆரம்பித்தார்.
இடையிடையே அமைச்சர்களின் கள்ளத் தொடர்புகள், கற்பழிப்பு வழக்குகள், சட்டசபையிலேயே செல்போனில் ஆபாச படம் பார்த்தது என பிட் காட்சிகளும் அரங்கேறி, பாஜக அரசின் பெயரை மேலும் கெடுத்தது.
ஒரு வழியாக 5 வருட ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில், மீண்டும் வெல்வோம் என்ற நம்பிக்கையே இல்லாமல் தான் தேர்தலை சந்தித்தது. பாஜக நம்பியதைப் போலவே அவர்களுக்கு இந்தத் தேர்தலில் பெரும் தோல்வி கிடைத்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் எதிர்க் கட்சியாக இருந்தும் எந்த வகையிலும் உருப்படியான காரியம் எதையும் செய்யாத காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவை ஆட்சியை விட்டு நீக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் காங்கிரசுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.
அதே நேரத்தில் கெளடாவின் கட்சி அவரது சமூகத்தினரான ஒக்கலிகா மக்கள் அதிகம் வசிக்கும் காவிரிப் படுகை மாவட்டங்களில் மட்டும் வழக்கம் போல் வெற்றி பெற்றுள்ளது.
தேர்தல் முடிவுகள்:
கர்நாடகத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்ததால் 223 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
ஆட்சியைப் பிடிக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 121 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ்- 121
மதசார்பற்ற ஜனதா தளம்- 40
பாஜக-40
எதியூரப்பா கட்சி- 6
ரெட்டி-ஸ்ரீராமுலு கட்சி- 4
சுயேச்சைகள்- மற்றவை- 12
இதன்மூலம் எந்தக் கட்சியின் ஆதரவும் இல்லாமல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.
காலையில் ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியமைக்கத் தேவையான அளவுக்கு இடங்கள் கிடைக்குமா என்பதே சந்தேகமாகவே இருந்தது. ஆனால், வாக்கு எண்ணிக்கை கடைசி கட்டத்தை எட்டுகையில் காங்கிரசுக்கு அதிக இடங்கள் கிடைத்துவிட்டன.
இதனால் தேவ கெளடா அல்லது எதியூரப்பாவின் ஆதரவு இல்லாமலேயே அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது.
ஆளும்கட்சியாக இருந்த பாஜக இரண்டாவது இடத்தைப் பிடிக்க மதசார்பற்ற ஜனதா தளத்துடன் போட்டி போட்டுக் கொண்டுள்ளது. இரு கட்சிகளுமே சம அளவில் 40 இடங்களில் வென்றுள்ளன.
எதியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி 6 தொகுதிகளிலும், ரெட்டி சகோதரர்களின் வலது கரமான ஸ்ரீராமுலுவின் தனிக் கட்சி 4 இடங்களிலும் வென்றுள்ளன. மற்றவர்கள் 12 இடங்களைப் பிடித்துள்ளனர்.
பாஜகவில் இருந்து பிரிந்து தனிக் கட்சி தொடங்கி மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய எதியூரப்பாவுக்கு இந்தத் தேர்தலில் பெரும் தோல்வியை கிடைத்துள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கும் கூடுதலாக 15 இடங்கள் கிடைத்துள்ளன. ஆனால் பாஜக தான் கடும் இழப்பை சந்தித்துள்ளது. அந்த கட்சியிடம் இருந்து 70 தொகுதிகள் காணாமல் போய்விட்டன.












Click it and Unblock the Notifications