நினைச்சபடியே.,.. கர்நாடக முதல்வர் பதவியைக் கைப்பற்றினார் சித்தராமையா!!

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 121 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. இதைத் தொடர்ந்து புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்க அக்கட்சியின் மேலிட பார்வையாளர்களான மத்திய அமைச்சர் ஏ.கே. ஆண்டனி, கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் மசூதன் மிஸ்த்ரி, கர்நாடக மாநில தேர்வுக் குழுத் தலைவர் பெலைரோ, மத்திய அமைச்சர் ஜிதேந்தர்சிங் ஆகியோர் பெங்களூர் வருகை தந்தனர். இன்று காலை முதலே புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பது தொடர்பான ஆலோசனைகளை அவர்கள் மேற்கொண்டனர்.
கர்நாடக மாநில முதல்வர் பதவிக்கு மல்லிகார்ஜூன கார்கே, சித்தாராமையா ஆகியோரிடையே கடும் போட்டி இருந்து வந்தது. கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தேஷ்பாண்டே, முன்னாள் அமைச்சர் சிவக்குமார், மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி என மேலும் சிலரது பெயர்களும் முதல்வர் பதவிக்கான 'ரேஸில்' அடிபட்டது. . இந்த நிலையில் தமக்கு 120 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது என்று நேற்றே அறிவித்திருந்தார் சித்தராமையா. அத்துடன் தமது ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு நேற்று இரவு விருந்தும் கொடுத்து 'அரவணை'த்துக் கொண்டார்.
இன்று காலை காங்கிரஸ் மேலிடக் குழுவினரை சந்திப்பதற்கு முன்பாக முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான எஸ்.எம். கிருஷ்ணாவை சித்தராமையா சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு 20 நிமிட நேரம் நீடித்தது. அவர் கிருஷ்ணாவின் ஆதரவு எம்.எல்.ஏக்களின் சப்போர்ட்டை கோரியிருக்கலாம் எனக் கூறப்பட்டது. அதே நேரத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் மல்லிகார்ஜூன கார்கேவுக்குத்தான் அதிக வாக்குகள் கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறிவந்தனர். வடக்கு மற்றும் ஹைதராபாத் கர்நாடக எம்.எல்.ஏக்கள் அவரையே ஆதரிப்பார்கள் என்று கூறினர். அத்துடன் 1970களில் தேவராஜ் அர்ஷ் அமைச்சரவையில் இடம்பெற்ற மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முதல்வராக வேண்டுமா? அல்லது 7 வருஷத்துக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்த சித்தராமையா முதல்வராக வேண்டுமா ? என்றும் அவர் கலகக் குரலையும் எழுப்பினர்.
இந்த நிலையில் காங்கிரஸ் மேலிடக் குழுவினர் எம்.எல்.ஏக்களுடன் குழு குழுவாக ஆலோசனை நடத்தியது. பின்னர் எம்.எல்.ஏக்களிடையே ரகசிய வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் சித்தாராமையாவையே முதல்வராக தேர்ந்தெடுக்க பெரும்பான்மையாக 80 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். மல்லிகார்ஜூன கார்கேவுக்கு 40 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து கர்நாடகவின் புதிய முதல்வராக எதிர்வரும் சில நாட்களில் சித்தராமையா பொறுப்பேற்க இருக்கிறார்.
2 முறை துணை முதல்வர்
1970களின் இறுதியில் அரசியலுக்கு வந்த சித்தராமையா 1980களில் ஜனதா கட்சியில் இணைந்தார். பின்னர் ஜனதா தளத்திலும் முக்கிய பொறுப்புகள் வகிக்கிறார். 1996ஆம் ஆண்டு ஜே.எச். படேல் முதல்வராக இருந்த போது துணை முதல்வராக நியமிக்கப்பட்டவர் சித்தராமையா..தேவ கவுடா தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் உதயமான போதும் அதில் பயணித்தவர். 2004-ம் ஆண்டு மதச்சார்பற்ற ஜனதா தளமும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து அரசு அமைத்த போது தரம்சிங் முதல்வராகவும் சித்தராமையா துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்டனர்.
2006ஆம் ஆண்டு தேவகவுடாவுடனான கருத்து வேறுபாட்டால் மதச் சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அப்போது நடைபெற்ற இடைத் தேர்தலில் 257 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து பாஜகவும் மதச் சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து வேட்பாளரை நிறுத்தியிருந்தன. 2008 ஆம் ஆண்டு தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றார். தற்போதைய சட்டசபை தேர்தலில் வெற்றி இம்முறை முதல்வர் நாற்காலியை எட்டிப் பிடித்திருக்கிறார் சித்தராமையா!












Click it and Unblock the Notifications