நெருப்போடு விளையாட வேண்டாம்: மத்திய அரசுக்கு மமதா எச்சரிக்கை

புர்ட்வான் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மமதா பானர்ஜி, மத்திய அரசை எதிர்த்து கடுமையாக சாடினார். அனல் பறக்கும் பேச்சில் அவர் கூறியதாவது:
நிலக்கரி சுரங்க ஊழல் கதாநாயகர்கள் எங்களுக்கு எதிராக சதிவலை பின்னத்தொடங்கியுள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் எங்கள் அரசுக்கும் இடையூறு ஏற்படுத்த தனது கட்டுப்பாட்டில் இருக்கும் எல்லா துறைகளையும் மத்திய அரசு ஏவி விட்டுள்ளது.
நாங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த போதே எங்கள் கட்சி எம்.பி.க்கள் மீது வருமான வரி துறையினரை மத்திய அரசு ஏவி விட்டது.
உங்களோடு இருந்த காலத்தில் நாங்கள் கெட்டவர்களாக இருந்தோம் என்னும் போது உங்களுடன் இல்லாத நேரத்திலும் நாங்கள் கெட்டவர்கள் தான்.
ஊழலில் சிக்க வைக்க திட்டம்
நாங்கள் மாயாவதியை தொட்டுப்பார்த்து விட்டோம். முலாயம் சிங்கை தொட்டுப் பார்த்து விட்டோம். ஜெயலலிதாவை தொட்டுப் பார்த்து விட்டோம்.ஆனால், எங்களால் மம்தாவை தொட முடியவில்லை என்று மத்திய அரசு கூறுகிறது. எனது பெயரையும் இழுக்க வேண்டும் என மத்திய அரசு வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்கிறது.
நெருப்போடு விளையாடவேண்டாம்
ஆனால் என் முடியை கூட யாரும் தொட முடியாது. நான் செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவள் இல்லை. ஏழைகளின் குடும்பத்தை சேர்ந்தவள். முதல்வராக மக்கள் நினைக்கவில்லை. மமதாவாகத்தான் என்னைத் தெரியும். நான் யாருக்கும் தலை வணங்க மாட்டேன். நெருப்போடு விளையாட வேண்டாம் என்று மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
6 மாதத்தில் தேர்தல்
மேற்கு வங்கத்தில் இருக்கும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பா.ஜ.க.வின் ஒரு பிரிவினர், நமது கட்சிக்கு எதிராகவும், ஆட்சிக்கு எதிராகவும் சதிவலை பின்னி வருகின்றனர். அந்த சதிவலையை நாம் கிழித்தெறிவோம். இன்னும் 3 முதல் 6 மாதத்திற்குள் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறும். டெல்லியில் நாம் மாற்றத்தை உருவாக்குவோம்.
நாடு முழுவதும் பிரச்சாரம்
மேற்கு வங்காள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக்கூடாது. வரும் பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்வேன் என்றும் மமதா கூறினார்.












Click it and Unblock the Notifications