தியேட்டர் இடிந்து விழுந்து மூவர் பலி: தலைமறைவான தியேட்டர் உரிமையாளருக்கு வலை
திருப்பத்தூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தியேட்டர் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தியேட்டர் உரிமையாளர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை மாலையில் பலத்த சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை கொட்டியது. இடி மின்னலும் பயங்கரமாக இருந்ததால் அங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. ராமக்காபேட்டையில் உள்ள ஒரு தியேட்டரின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் சினிமா பார்த்துக் கொண்டிருந்த 3 பேர் பலியானார்கள். 5 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தியேட்டர் உரிமையாளரான சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த லட்சுமண் சேகர் (55), மேலாளர் ஜாவீத் (50) ஆகியோரை தேடி வருகின்றனர்.
படம் திரையிட தடை
தியேட்டரில் படம் திரையிட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கர் கூறினார். கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்து, தொழில்நுட்ப அறிக்கை அளிக்கும்படி பொதுப்பணித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் ஆய்வின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கலெக்டர் கூறினார்.












Click it and Unblock the Notifications