இது பீகார் ஸ்டைல்.... 13 ரயில்களை பேரணிக்காக வாடகைக்கு எடுத்த லாலு பிரசாத்!
பாட்னா: பொதுவாக நம்மூரில் அரசியல் கட்சியின் மாநாடு என்றால் முன்பு லாரிகளை வாடகைக்கு எடுத்து ஆட்களை இறக்கினார்கள்...இப்பொழுது பேருந்துகள் புக் செய்யப்பட்டு ஆட்கள் 'வாடகைக்கு' கொண்டு செல்லப்படுகின்றனர்.
பீகார் மாநிலமோ மிகவும் வித்தியாசமானது.. ஒரு கட்சி பிரம்மாண்ட பேரணி நடத்த வேண்டும் என்று தீர்மானித்துவிட்டால் அதாவது 'மாஸ்' காட்ட வேண்டுமெனில் அதிரடிதான்... ரயில்களை வாடகைக்கு பிடித்து ஆட்களை ஏற்றிச் செல்வதுதான் அவர்களது ஸ்டைல்..இப்படித்தான் நாளை மறுநாள் நடத்த இருக்கிற தமது கட்சியின் பேரணிக்காக முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் 13 ரயில்களை புக் செய்திருக்கிறார். இந்த 'ஸ்பெஷல்' ரயில்கள் மூலம் ஆட்களைக் கொண்டு சேர்ப்பதில்தான் ஒருவார காலமாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர்கள் மும்முரமாக இருந்து வருகின்றனர்.

சிறப்பு ரயில்கள் விவரம்
ஜார்க்கண்ட் மற்றும் பீகாரின் பல பகுதிகளில் இருந்தும் பாட்னாவுக்கு அழைத்து வருவதற்காக கிழக்கு மத்திய ரயில்வேயில் 8 ரயில்களும் கிழக்கு ரயில்வேயில் 5 ரயில்களும் புக் செய்திருக்கின்றனர்.

2007ல் 35 ரயில்கள்
இதே லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்த போது 2007ஆம் ஆண்டு 35 ரயில்கள் கட்சிப் பேரணிக்காக புக் செய்யப்பட்டது. தற்போது இது குறைந்து 13 ஆகி இருக்கிறது.

ஐக்கிய ஜனதா தளம்
கடந்த ஆண்டு பாட்னாவில் ஆளும் ஐக்கிய ஜனதா தளமும் இதேபோல் பிரம்மாண்ட பேரணியை நடத்தியது. அப்போதும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன..

ரயில்வே பிசி
ரயில்கள் வாடகைக்கு விடப்படுவதால் ஏற்படும் நெருக்கடியை சமாளிப்பதற்காக கோச்சுகளை கிழக்கு மத்திய ரயில்வே 'கடன்'வாங்கி வருகிறது. இதேபோல் சிறப்பு ரயில்களை சமாளித்து இயக்க ஸ்டேஷன் மாஸ்டர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தனியே நியமிக்கப்பட்டிருக்கின்றனர்..கிழக்கு மத்திய ரயில்வே துறை இப்பொழுது ரொம்பவும் பிசியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications