இந்தூர் மருத்துவ கல்லூரியில் சட்டவிரோத மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கொடுத்தார் அன்புமணி: சிபிஐ

வழக்கு என்ன?
2008-09 கல்வியாண்டில் போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாத மத்திய பிரதேசம் இந்தூர் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அப்போதைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அனுமதி அளித்தார் என்பது சிபிஐ வழக்கு.
இந்தூரில் உள்ள இண்டெக்ஸ் தனியார் மருத்துவக் கல்லூரியில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கியதாக அன்புமணி ராமதாஸ் உள்பட 10 பேர் மீது டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது தொடர்பான வாதம் சிறப்பு நீதிபதி ரவிந்தர் கௌர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதனால் அன்புமணி உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
எப்படி மோசடி நடந்தது?
அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வி.கே. சர்மா, இந்தூர் மருத்துவக் கல்லூரியில் போதிய ஆசிரியர்கள், மருத்துவ சாதனங்கள் இல்லை என்பதால் 2008-09 கல்வியாண்டில் 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று இந்திய மருத்துவ கவுன்சில் குழுவினர் அக்கல்லூரியில் ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர். அதை எதிர்த்து மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட வழக்கில், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவும் அக்கல்லூரியியில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று கூறியது. ஆனால், 2008-ல் தன்னிச்சையாக ஒரு குழுவை அன்புமணி அமைத்தார். அக்குழு, கல்லூரியில் அனைத்து வசதிகளும் இருப்பதாக அறிக்கை அளித்தது. அதை அடிப்படையாக வைத்து இந்தூர் மருத்துவக் கல்லூரியில் 2008-09 கல்வியாண்டில் 2-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையைத் தொடர அன்புமணி அனுமதி அளித்தார். அன்புமணியுடன், இந்தூர் மருத்துவக் கல்லூரி தலைவரான சுரேஷ் சிங் பக்ரோடியாவும், அவரது கல்லூரி அலுவலர்களும் கூட்டாக மோசடி செய்துள்ளனர் என்று குற்றம்சாட்டினார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் இன்று வாதத்தை தொடங்க நீதிபதி அனுமதி அளித்தார்.












Click it and Unblock the Notifications