'பட்டாசு வெடி விபத்தில் உயிர் பலி ஏற்பட்டால் உரிமையாளர் மீது குண்டாஸ்': போலீஸ் எச்சரிக்கை
விருதுநகர்: பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழந்தால் ஆலை உரிமையாளர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என விருதுநகர் மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் கடந்த சில மாதங்களாக விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புக்கள் அதிகம் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு முதலிப்பட்டியில் நடந்த பட்டாசு விபத்தில் 60 பேர் பலியாகினர், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கடந்த மாதம் நடந்த வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கிச்சநாயக்கன்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துகள் விதிமீறல்கள் காரணமாகவே நடப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதை தடுக்கும் விதமாக பட்டாசு ஆலைகளில் இனிமேல் விபத்து ஏற்பட்டு உயிர் பலிகள் ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட ஆலையின் உரிமையாளர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று விருதுநகர் எஸ்.பி. மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சிவகாசி அருகே நாராயணபுரத்தில் 8 பேர் பலியான பட்டாசு வெடி விபத்தில் சம்மந்தப்பட்ட ஆலையின் உரிமையாளர் விஜயகுமார், மேலாளர், ஃபோர்மென் உட்பட 4 பேர் மீது விபத்து என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆனால் இனிமேல் பட்டாசு ஆலைகளில் விபத்து நடந்து உயிர் பலி ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட ஆலையின் உரிமையாளர், மேலாளர், போர்மென் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பட்டாசு ஆலையின் லைசென்ஸ் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
எனவே பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கவனமுடனும், விழிப்புணர்வுடனும் பணியாற்ற வேண்டும் என்று எச்சரிக்கை படுகிறார்கள் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications