For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊர் ஊருக்கு 2 அணிகள் இருக்கும்.. தி்முகவினருக்கு கருணாநிதி அட்வைஸ்

Google Oneindia Tamil News

Karunanidhi's advice to DMK speakers
சென்னை: நீங்கள் ஒவ்வொரு ஊருக்கும் போகின்ற நேரத்தில் அங்கே இரண்டு அணிகள் இருக்கும், நீங்கள் எந்த அணியிலும் சேராதீர்கள், உங்களுடைய அணி ஒரே அணி என்ற அந்த நிலைமையிலே நீங்கள் பணியாற்றுங்கள், அப்படி பணியாற்றினால் தான் அது அரும்பணியாக இருக்கும், நம்முடைய அணிக்கு, நம்முடைய கழகத்திற்கு வலிமை சேர்ப்பதாக இருக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடந்த கூட்டத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

இங்கே பேசிய நண்பர்கள், கருத்துக்களை எடுத்துரைத்தவர்கள், சொற்பொழிவாளர்களுக்கு உள்ள சங்கடங்கள் சிலவற்றையும், அவர்களை எல்லா இடங்களிலும் அழைத்து சிறப்பு செய்வதில்லை, பயன்படுத்திக்கொள்வதில்லை என்ற மனக்குறையையும் வெளியிட்டிருக்கின்றீர்கள். அந்த மனக்குறையைத் தீர்க்கின்ற வகையில் தலைமைக் கழகம் கலந்தாலோசனை செய்து எந்தெந்த வகையில் எல்லாம் மன நிறைவு அளிக்கத்தக்க வகையில் திருத்தி அமைப்பது என்று யோசித்து, அதைச் செயல்படுத்தும் என்ற உறுதியை இந்த கூட்டத்தில் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

கழகத்திலே பல அணிகள் இருக்கின்றன. மகளிர் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி, தொழிலாளர் அணி, இலக்கிய அணி என்று இப்படி பல அணிகள் இருக்கின்றன. தலைவரும், பொதுச் செயலாளரும் பார்த்து உருவாக்கிய இந்த அணிகள் இல்லாமல், நீங்களே அந்தந்த ஊர்களில் சில அணிகளை உருவாக்கிக்கொண்டு செயல்படுவது எனக்கு நன்றாக தெரியும். இவைகளை எல்லாம் அறியாதவன் அல்ல நான். உணராதவன் அல்ல நான்.

எனவே இலக்கிய அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி, மாணவர் அணி போன்ற இந்த அணிகள் வளர வேண்டும், வலிமை பெற வேண்டும் என்று எண்ணுகின்ற அதே நேரத்தில் ஊருக்கு ஊர் உருவாகின்ற அணிகள் ஒழிய வேண்டும் என்பது தான் இந்த கூட்டத்தில் நான் வெளியிடுகின்ற செய்தியாக இருக்க முடியும்.

யாரோ ஒரு நண்பர், அணிகளைப் பற்றி இங்கே பேசும்போது ஸ்டாலின் கூட குறுக்கிட்டு, அணிகள் பற்றியெல்லாம் இங்கே பேச தேவையில்லை, ஒரு சொற்பொழிவாளர் நடந்து கொள்ள வேண்டிய முறை, அவருக்கு நாம் தருகின்ற வாய்ப்பு, ஆக்கம், ஊக்கம் இதைப் பற்றி பேசினால் போதுமென்று சொன்னார். நான் அதிலே கொஞ்சம் வேறுபடுகிறேன்.

ஸ்டாலின் இளையவர், என்னைப் போன்ற இவ்வளவு அனுபவத்தை, தி.மு.க.வின் அரசியலில் அவர் முழுதும் இன்னும் உணராதவர், உணர்ந்தவன் என்ற காரணத்தால் இந்த ‘‘அணிகள்'' பெருகினால், இவை ‘‘அணிகளாக'' இருக்காது; கழகத்திற்கு ‘‘பிணிகளாக'' ஆகிவிடும் என்பதற்காகத்தான் இந்த அணிகளையெல்லாம் இப்பொழுதே நாம் திருத்திக்கொள்ள வேண்டுமென்று சொல்ல விரும்புகிறேன்.

நாமெல்லாம் ஒற்றுமையோடு, உணர்வோடு, ‘‘அணிகளுக்கு'' இடம் இல்லாமல், ‘‘பணிகளுக்கு''த்தான் இந்த இயக்கத்திலே இடம் - அந்த பணி, பகுத்தறிவு பணியாகவும் இருக்கலாம், அந்த பணி படை நடத்துகின்ற பணியாக இருக்கலாம், அந்த பணி அரசியல் பணியாகவும் இருக்கலாம், அந்த பணி இலக்கிய பணியாகவும் இருக்கலாம், எந்த பணியானாலும், இந்த இயக்கத்தை கட்டிக்காக்கின்ற அந்த ஒற்றுமையான பணியைத்தான் நாங்கள் விரும்புகிறோம் என்கிற அந்த உணர்வு இருந்திட வேண்டும். அந்த உணர்வு எல்லோரிடத்திலும் இருப்பதாக நான் கற்பனை செய்து கொள்ளவில்லை.

என் திருவாரூரையே எடுத்துக்கொள்ளுங்கள். பழைய ஊர், நான் பிறந்த ஊர். அந்த ஊரிலேயே தி.மு.க. கூட்டத்திற்கு நான் போனேன், லட்சக்கணக்கான மக்கள் திரண்டார்களே என்று பரவசமடைகின்ற நேரத்தில் மறுநாள் அதே திருவாரூரில் ஒரு கலவரம் நடைபெற்றது. கலவரம் வேறு யாருக்குமல்ல. திமுகவினருக்குள்ளாகவே நடைபெற்றது என்றால், அதை விட அவமானம் எனக்கு வேறு எதுவும் இருக்க முடியாது.

ஆகவே அங்கே கட்சி வளர்ந்ததும் ஒன்று தான், வளராமல் போனதும் ஒன்று தான், என்று நான் சலிப்படைகின்ற அளவிற்கு நிலைமை வரக்கூடாது. அந்த சலிப்பை எனக்கு ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்கின்ற பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது, பேச்சாளர்களுக்கு இருக்கிறது, சொற்பொழிவாளர்களுக்கு இருக்கிறது, கருத்துரையாளர்களுக்கு இருக்கிறது.

நீங்கள் ஒவ்வொரு ஊருக்கும் போகின்ற நேரத்தில் அங்கே இரண்டு அணிகள் இருக்கும், நீங்கள் எந்த அணியிலும் சேராதீர்கள், உங்களுடைய அணி ஒரே அணி என்ற அந்த நிலைமையிலே நீங்கள் பணியாற்றுங்கள், அப்படி பணியாற்றினால் தான் அது அரும்பணியாக இருக்கும், நம்முடைய அணிக்கு, நம்முடைய கழகத்திற்கு வலிமை சேர்ப்பதாக இருக்கும் என்றார் அவர்.

English summary
DMK president Karunanidhi has adviced the party platform speakers not to side with any groups.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X