முகமது சிராஜ்க்கு காயமா? ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் ஆடுவதும் சந்தேகம்.. காஷ்மீர் வீரருக்கு லக்!
சென்னை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஜூன் 6ஆம் தேதி தொடங்க உள்ள ஒரே ஒரு போட்டி கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடரில், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் விளையாடுவது சந்தேகம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சிராஜுக்கு ஓய்வளிக்கப்பட்டால், உள்நாட்டு கிரிக்கெட்டில் அசத்திய ஜம்மு-காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி அல்லது பஞ்சாபின் குர்னூர் பிரார் ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கப் பிரகாசமான சூழல் நிலவுகிறது. அண்மையில் முடிவடைந்த விறுவிறுப்பான ஐபிஎல் தொடரில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக முகமது சிராஜ் இறுதிப்போட்டி உட்பட அனைத்து போட்டிகளிலும் விளையாடினார்.

சிராஜ் ஏற்கனவே சண்டிகர் வந்தடைந்துவிட்டாலும், தொடர்ச்சியான போட்டிகளால் ஏற்பட்டுள்ள பணிச்சுமை காரணமாக அவரது உடல்நிலையை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். அடுத்த 48 மணி நேரத்திற்குள் அவர் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஏற்கனவே ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதனால் சிராஜையும் உட்கார வைத்தால் வேகப்பந்துவீச்சு முற்றிலும் அனுபவமில்லாமல் போய்விடுமே என்ற தயக்கமும் இந்திய அணி நிர்வாகத்திடம் உள்ளது. கடந்த ரஞ்சி கோப்பை சீசனில் 60 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஜம்மு-காஷ்மீர் அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் ஆகிப் நபி.
ஆரம்பத்தில் இவரை நெட் பவுலராக மட்டுமே பிசிசிஐ சேர்த்திருந்தது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தற்போது சிராஜுக்கு பதிலாக அவர் முதன்மை அணியில் பேக்-அப் வீரராக இணைக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை சிராஜ் கடைசி நேரத்தில் விலகினால், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 6 அடி 5 அங்குல உயர வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுக வீரராக களம் இறங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது'.
இந்த டெஸ்ட் போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கில் வராது என்பதால், சீனியர் வீரர்களுக்கு ஓய்வளித்து இளம் வீரர்களைச் சோதித்துப் பார்க்கவே தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் விரும்புவதாகத் தெரிகிறது. சிராஜ் விளையாடுவாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகும்.












Click it and Unblock the Notifications