ஒரே நாளில் 5 மைனர் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: தேனி கலெக்டர் அதிரடி
தேனி: தேனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெறவிருந்த ஐந்து மைனர் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டடுள்ளன.
தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட தேனி, போடி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி மற்றும் கம்பம் ஆகிய பகுதிகளில், திருமண வயதை எட்டாத பெண்களுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட சமூக நல அலுவலகம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் போன்றவற்றிற்கு தகவல்கள் கிடைத்தன.
தேனி அருகே உள்ள அல்லிநகரம் என்ற ஊரில் , 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 16 வயதுடைய பெண்ணிற்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு சென்ற தேனி மாவட்ட சமூக நல அலுவலர்கள் மற்றம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் போலீசார், அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
இதேபோன்று சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை, கம்பம், ஆண்டிபட்டி உள்ளிட்ட 4 இடங்களிலும் நடைபெற இருந்த மைனர் பெண் திருமணத்தையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்த மைனர் திருமணங்கள் ஒரே நேரத்தில் நடைபெற இருந்ததால் மாவட்ட சமூக நல அலுவலக அலுவலர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அலுவலர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ஒரே நாளில் தேனி மாவட்டத்தில் நடைபெற இருந்த 5 மைனர் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications