பத்திரப்பதிவு செய்வோருக்கு குட்நியூஸ்.. நிலத்தின் சந்தை மதிப்பு.. உயர்நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு
மதுரை: 2018-ம் ஆண்டில் பதிவு செய்த பத்திரத்துக்கு கூடுதல் கட்டணத்தை செலுத்துமாறு 2025-ம் ஆண்டில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சொத்துகளுக்கான மதிப்பு வழிகாட்டுதல்களை நிர்ணயிப்பதும், அவற்றை மறுஆய்வு செய்வதும் மதிப்பீட்டு குழுவால் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்பதை சட்டவிதிகள் உள்ளன. எனவே நிலத்தின் சந்தை மதிப்பை உயர்த்தும் அதிகாரம் மாவட்ட பதிவாளருக்கு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கு ஒன்றில் தெளிவுப்படுத்தி உள்ளது.
அப்துல் கலாம் அறிவியல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அபெல் மூர்த்தி, திருமங்கலம் பகுதியை சேர்ந்த காசிமாயன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலத்திற்கு வழிகாட்டி மதிப்பு தொடர்பாக வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் கூறுகையில், "தற்காலத்தில் விவசாயம் செய்வது வெகுவாக குறைந்து இந்த தொழில் அழிவின் விளிம்பில் உள்ளது.

குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றுக்காக விவசாய நிலங்களை விவசாயிகள் விற்கும் நிலை ஏற்பட்டால், சந்தை மதிப்பை விட வழிகாட்டி மதிப்பை பல மடங்கு உயர்த்தப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்படும் நிலை உள்ளது. இதனால் அந்த விவசாய நிலங்களை கூடுதல் விலைக்கு வாங்குவதற்கு யாரும் முன்வருவதில்லை. தனது சொந்த ஆதாயத்திற்காக விவசாய நிலங்களின் வழிகாட்டி மதிப்பை தன்னிச்சையாகவும் நியாயமற்ற முறையிலும் தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை உயர்த்துகிறது. பதிவுத்துறையின் இந்த செயல் சட்டவிரோதமானது. எனவே கிராமங்களில் நிலத்தின் வழிகாட்டி மதிப்பை தேவையில்லாமல் உயர்த்துவதை தடுக்க வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
இதுகுறித்து பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்தநிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், "2018-ம் ஆண்டில் பதிவு செய்த பத்திரத்துக்கு கூடுதல் கட்டணத்தை செலுத்துமாறு 2025-ம் ஆண்டில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. சொத்துகளுக்கான மதிப்பு வழிகாட்டுதல்களை நிர்ணயிப்பதும், அவற்றை மறுஆய்வு செய்வதும் மதிப்பீட்டு குழுவால் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்பதை சட்டமாகும். இதற்கு மாறாக மாவட்டப் பதிவாளர் எந்தவித ஆதாரமும் இன்றி நிலத்தின் சந்தை மதிப்பை நிர்ணயித்திருக்கிறார்.
இதுதொடர்பான பதிவுத்துறை துணைத்தலைவரின் நடவடிக்கை சட்டத்திற்கு உட்பட்டது இல்லை. எனவே ஒரு குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள சொத்தின் சந்தை மதிப்பை முதன்முறையாக நிர்ணயிப்பதற்கு அதுதொடர்பான குழுவுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது. அந்த குழுவின் வேலையை தானே எடுத்துக்கொண்டு மாவட்ட பதிவாளர் பிறப்பித்த உத்தரவு சட்டப்படி செல்லாது. பதிவுத்துறை அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களையும், சட்ட விதிகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும்" இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.














Click it and Unblock the Notifications