ஸ்பாட் பிக்ஸிங்: சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளரின் மருமகனுடன் வின்து தாரா சிங் தொடர்பு
மும்பை: ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகர் தாரா சிங்கின் மகன் வின்து தாரா சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுடன் தொடர்பில் இருந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங்கில் கிரிக்கெட் வீரர்களுக்கும், தரகர்களுக்கும் இடையே உள்ள ஆளாக செயல்பட்டதற்காக மறைந்த பாலிவுட் நடிகர் தாரா சிங்கின் மகன் வின்து தாரா சிங் (49) நேற்று மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டார். முன்னதாக நேற்று முன்தினம் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதை அவர் ஒப்புக் கொண்டார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் போலீஸ் விசாரணையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளர் சீனிவாசனின் மருமகனும், அணியின் சிஇஓவுமான குருநாத் மெய்யப்பனுடன் தொடர்பில் இருந்ததாக வின்து ஒப்புக் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

வின்துவின் போனில் அவர் குருநாத்துக்கு பலமுறை கால் செய்து பேசியது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் குருநாத்துடன் பேசி முடித்த உடன் தரகர் ரமேஷ் வியாஸுக்கு போன் செய்து பேசியதாக போலீசார் தெரிவித்தனர். போலீசாரால் கைது செய்யப்பட்ட வியாஸ் தான் வின்துவுக்கு சூதாட்டத்தில் தொடர்பு உள்ளதை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் போட்டிகளின்போது சென்னை அணியின் விஐபி பெட்டியில் தான் வின்து அமர்ந்து போட்டிகளை பார்த்துள்ளார். சென்னை அணிக்கு வின்து எப்படி நெருக்கம் ஆனார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது சென்னை தொடர்புகள் குறித்தும் விசாரணை தொடங்கியுள்ளது. இந்நிலையில் மும்பை போலீசார் குருநாத்திடம் விசாரணை நடத்தலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications