Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10 மணி நேர அட்டகாசத்திற்குப் பின்னர் போலீஸாரிடம் சிக்கினார் துப்பாக்கியுடன் மிரட்டிய பைனான்சியர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கீழ்பாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியுடன் தற்கொலை மிரட்டல் விடுத்து போலீஸாரையும், பொதுமக்களையும் பெரும் டென்ஷனுக்குள்ளாக்கிய சினிமா பைனான்சியரை போலீஸார் 10 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் மடக்கிப் பிடித்தனர்.

விருதுநகரைச் சேர்ந்தவர் விஜயஹர் (45). மனைவி பெயர் ஜெபி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மனைவி மற்றும் குடும்பத்தினர் விருதுநகரில் வசிக்கிறார்கள். விஜயஹர் மட்டும் சென்னையில் தங்கியிருந்து பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோடு பஸ் நிறுத்தம் அருகே சப்தமாலிகா என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 3 பிளாக்குகளை கொண்ட இந்த குடியிருப்பு 3 மாடி குடியிருப்பு ஆகும்.

இதில் முதல் பிளாக்கில் முதல் மாடியில் பைனான்சியர் விஜயஹர் ஒரு சொகுசு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தங்கியுள்ளார். அதை தனது அலுவலகமாகவும் பயன்படுத்தி வந்தார்.

பெரும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் விஜயஹர். இவரது தந்தை பெயர் ஜெயராஜ் நாடார். அவரது பெயர் பஸ்கள் ஓடுகின்றனவாம். ஆனால்சினிமா சகவாசத்தால் பல கெட்ட பழக்கங்களுக்கு அடிமையானவர் விஜயஹர்.

சினிமா நடிகர், நடிகையர் பலர் இவருக்குப் பழக்கமாம். நடிகர் ஆனந்த பாபு ரொம்ப நட்பாம். இரவில் இவருடன் சினிமாவைச் சேர்ந்த பெண்கள் வந்து தங்குவார்களாம்- அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கூறுகிறார்கள்.

நேற்று இவர் பெரும் நாடகம் நடத்தி முடித்தார். நேற்று காலையில், பிரதான சாலைக்கு வந்து துப்பாக்கியைக் காட்டி பலரையும் மிரட்டியிருக்கிறார். பின்னர் மீண்டும் வீட்டுக்குள் சென்று தாம் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது.

இது தொடர்பாக போலீசருக்குத் தகவல் தெரிவிக்கப்பட சிறப்பு அதிரடிப்படையில் அங்கு குவிந்தனர். மேலும் தற்கொலை மிரட்டல் விடுத்த நபருடன் ஒலிபெருக்கி மூலமும் போலீசார் பேசி சமாதானப்படுத்தும் முயற்சி தொடங்கியது. ஆனால் யாருடைய பேச்சுக்கும் விஜயஹர் மசியவில்லை. அவருடன் பெண் ஒருவரும் இருந்தார். அவர் அவரது உதவியாளர் ஆவார்.

இவர் தங்கியுள்ள வீட்டுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வாடகை கொடுப்பதாக தெரிகிறது. கடந்த 3 வருடங்களாக இந்த வீட்டை பயன்படுத்தி வருகிறார். தற்போது வீட்டு உரிமையாளருக்கும், இவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு சண்டை நடந்து வருகிறது.

வீட்டு உரிமையாளர் இவரை வீட்டை காலி செய்ய சொன்னதாகவும், விஜயஹர் வீட்டை காலி செய்ய மறுப்பதாகவும் தெரிகிறது. இது சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு போடப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் போலீசிலும் வீட்டு உரிமையாளர் புகார் கொடுத்துள்ளார்.

காலை 7 மணியளவில் கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இருந்து 2 போலீஸ்காரர்கள் வந்து விஜயஹரை வீட்டை காலி செய்ய சொன்னதாக தெரிகிறது. போலீசாருடன், விஜயஹர் சண்டை போட்டார். காலி செய்ய முடியாது என்று சத்தம் போட்டார்.

அடுக்குமாடி குடியிருப்பு நலச்சங்கத்தின் அலுவலகமும் விஜயஹர் வசிக்கும் வீட்டுக்கு அருகிலேயே உள்ளது. அந்த சங்க அலுவலகத்துக்கும் சென்று விஜயஹர் தகராறில் ஈடுபட்டார்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 20 வீடுகள் உள்ளன. அங்கு வசிப்பவர்கள் அனைவரிடமும் சண்டை போட்டுக்கொண்டிருந்த விஜயஹர் நேற்று திடீரென்று கையில் 2 துப்பாக்கிகளோடு வந்தார்.

அதில் ஒரு துப்பாக்கியை எடுத்து இரண்டு ரவுண்டு சுட்டார். துப்பாக்கி குண்டு பாய்ந்து குடியிருப்போர் நலச் சங்க அலுவலகமும் சேதமடைந்தது. கண்ணாடி கதவுகள் உடைந்து நொறுங்கின.

உடனே அங்கு வசிப்பவர்கள் அனைவரும் பயந்து தங்கள் வீட்டுக்குள் போய் பூட்டிக்கொண்டனர். விஜயஹர் கையில் துப்பாக்கிகளை பிடித்தபடி ஆவேசமாக கத்திக் கொண்டிருந்தார்.

நிலைமை மோசமானதால், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக துணை கமிஷனர் பவானீஸ்வரி 50-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் சம்பவ நடந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தார்.

அவருடன் உதவி கமிஷனர்கள் ராஜாராமன், ஞானசேகரன், இன்ஸ்பெக்டர்கள் சார்லஸ், மன்சூர் அலி ஆகியோரும் வந்திருந்தனர். விஜயஹரை லாவகமாக மடக்கிப்பிடிக்க கமாண்டோ போலீசாரும் குவிக்கப்பட்டனர். அந்த பகுதியே பெரும் பரபரப்பாகிவிட்டது. அப்போது பகல் 11 மணி இருக்கும்.

போலீஸ் படையினரை பார்த்ததும் விஜயஹர் வீட்டுக்குள் போய் பூட்டிக்கொண்டார். அவருடன் அவரது அலுவலக பெண் உதவியாளர் ஒருவரும் இருந்தார். அவரையும் வெளியே அனுப்பாமல் விஜயஹர் தன்னுடனேயே வைத்துக்கொண்டார்.

வீட்டுக்குள் இருந்து சத்தம்போட்டு ஆவேசமாக கத்தியபடியே இருந்தார். போலீஸ் படை உடனடியாக வெளியேற வேண்டும். இல்லாவிட்டால், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டியபடி இருந்தார்.

இதற்கிடையே சம்பவம் தொடர்பாக சொந்த ஊரில் வசிக்கும் விஜயஹரின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு போலீசார் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விஜயஹரை எதுவும் செய்துவிட வேண்டாம் என்றும், நாங்கள் விமானத்தில் புறப்பட்டு வருகிறோம் என்றும், நாங்கள் வந்தபிறகு விஜயஹரை என்ன செய்வது? என்று முடிவு செய்யலாம் என்றும் போலீசாரிடம் கூறிவிட்டனர்.

விஜயஹர் வீட்டுக்குள் இருந்தபடியே போலீசாரை கண்டபடி திட்டிக்கொண்டே இருந்தார். அவர் ஒரு மனநோயாளி போல ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தார். போலீஸ் அதிகாரிகள், பத்திரிகை நிருபர்கள், தீயணைப்பு வீரர்கள் போன்ற அனைவரும் விஜயஹரிடம் அன்பாக பேசி பார்த்தார்கள். விஜயஹர் யார் பேச்சையும் கேட்கவில்லை. போலீஸ் படை வெளியேறினால்தான் நான் வீட்டை விட்டு வெளியே வருவேன் என்று கூறிவிட்டார். தொடர்ந்து வீட்டுக்குள் இருந்து ஜன்னல் வழியாக பேசிக்கொண்டே இருந்தார்.

கையில் கிடைத்த கம்பு, துடைப்பான், கட்டை போன்றவற்றை ஜன்னல் வழியாக போலீஸ்காரர்கள் மீது வீசிக் கொண்டேயிருந்தார். அவரது போராட்ட காட்சிகளை எதிரில் உள்ள இன்னொரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து போலீசாரும் வீடியோ படம் எடுத்தபடியே இருந்தனர். வீட்டுக்குள் இருந்த விஜயஹரும் எதுவும் சாப்பிடாமல் கத்திக்கொண்டே இருந்தார். வெளியில் இருந்த போலீஸ் படையினரும் வீட்டைச்சுற்றி அரண்போல நின்றனர்.

மாலை 3.30 மணியளவில் இணை போலீஸ் கமிஷனர் சங்கர் சம்பவ நடந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தார். அவரும் வெளியில் நின்றபடி விஜயஹரோடு பேச்சுவார்த்தை நடத்தினார். இப்படியே நீடித்துக் கொண்டிருந்த போராட்டத்தால் பெரும் பதட்டமும், டென்ஷனும் ஏற்பட்டது. மக்கள் கூட்டமும் சாலையில் குவியத் தொடங்கியது.

இந்த நிலையில் இரவு 8 மணியளவில் போலீஸார் அதிரடியில் இறங்கினர். வீட்டு மின் இணைப்பைத் துண்டித்தனர். இதையடுத்து விஜயஹரும் தப்பிச் செல்வதற்காக தன்னுடன் இருந்த பெண்ணுடன் மெதுவாக வீட்டை விட்டு வெளியே வந்தார். கீழே நிறுத்தப்பட்டிருந்த தனது காருக்குள் துப்பாக்கியைக் கையில் பிடித்தபடி ஏறினார்.

பின்னர் காரை படு வேகமாக எடுத்தார். இதைப் பார்த்த போலீஸார் அபார்ட்மென்ட் கேட்டை மூடினர். ஆனால் கார் வந்த வேகத்தைப் பார்த்த போலீஸார் கேட்டை திறந்து விட்டனர். இதையடுத்து படு வேகமாக வெளியே வந்தார் விஜயஹர். ஆனால் மெயின் ரோடுவந்ததும் அவரால் வேகமாக போக முடியவில்லை. காரணம், டிராபிக்.

இதனால் காரை நகர்த்த முடியவில்லை. இதையடுத்து அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கடும் ஆவேசத்துடன் காரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்தனர் உள்ளே இருந்த விஜயஹருக்கும் அடி விழுந்தது. போலீஸார் விரைந்து வந்து இருவரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

அப்போது மணி இரவு 10 மணி. சிக்கிய விஜயஹரும், அவருடன் இருந்த பெண்ணும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

விஜயஹரை போலீஸாரை கைது செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+