மதுரை அரசு போக்குவரத்து கழக எம்.டி.க்கு ரூ.1 லட்சம் அபராதம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி
மதுரை: மதுரை அரசு போக்குவரத்து கழக எம்.டி.க்கு (மேலாண்மை இயக்குனர்) உச்ச நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் நடராஜன். மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் 25 ஆண்டுகள் தொழில்நுட்ப பணியாளராக பணிபுரிந்து, 2000ம் ஆண்டில் விருப்ப ஓய்வில் சென்றார். அவருக்கு பல ஆண்டுகளாக ஓய்வூதிய பலன்கள் வழங்கவில்லை.
இதையடுத்து நடராஜன் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்தார். விருப்ப ஓய்வு பெற்று 7 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்க மறுத்து அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்து ஓய்வூதிய பலன்கள் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடராஜன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஓய்வூதிய பலன்கள் வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் சிங்வி, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியிருப்பதாவது,
குறைந்த சம்பளம் வாங்கும் ஒரு தொழிலாளியை வழக்கு மேல் வழக்கு போட்டு அவரது கோரிக்கையை நிறைவேற்றாமல் தள்ளிப் போட்டுள்ளனர். ஒரு தொழிலாளி தனது கடும் உழைப்பால் சம்பாதித்த பணத்தை வழக்கிற்கு செலவு செய்ய நேர்ந்துள்ளது. இது சட்ட விரோதமானது. மனிதாபிமான செயலும் அல்ல.
விருப்ப ஓய்வுக்கு அனுமதித்துவிட்டு ஓய்வூதிய பலன்களை வழங்க மறுப்பது நியாயமல்ல. 10 ஆண்டாக அலைக்கழித்துள்ளதற்காக அரசு போக்குவரத்துக்கழக மதுரை கோட்ட எம்.டி.க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை ஓய்வூதிய பலன்களுடன் சேர்த்து 2 மாதத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications