ஹரியானா பள்ளி மாணவிகளில் 1,000 பேருக்கு பாலியல் வன்கொடுமை, 30,000 பேரிடம் பாலியல் அத்துமீறல்
சண்டிகர்: ஹரியானாவில் உள்ள பள்ளி மாணவிகளில் சுமார் 1,000 பேர் பாலியல் வன்கொடுமைக்கும், 30,000 பேர் பாலியல் அத்துமீறல்களுக்கும் ஆளாகி இருப்பது ஒரு கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் 60 ஆசிரியைகளை வைத்து மாநில கல்வித் துறை ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. பள்ளி மாணவிகள் எத்தனை பேர் பாலியல் வன்முறை மற்றும் அத்துமீறல்களுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை கண்டறிய அந்த ஆசிரியைகள் கணக்கெடுப்பு நடத்தினர்.
மாவட்டத்தில் உள்ள 443 துவக்கப் பள்ளிகள் மற்றும் 99 நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் 5 வயது முதல் 12 வயது வரையுள்ள 30,000 மாணவிகளிடம் பேசியபோது தாங்கள் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாகியதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். மேலும் 1,000 பேர் தாங்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதை ஒப்புக் கொண்டனர். அவர்களின் உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், பள்ளி ஆசிரியர்கள் தான் அவர்களிடம் தகாத முறையில் நடந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்த கணக்கெடுப்பு ஹரியானா அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிகளில் நடக்கும் பாலியல் அத்துமீறல் குறித்து கண்டறிய ஹரியானா குழந்தைகள் உரிமை கமிஷன் குழுவினரை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க அம்மாநில முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா முடிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications