அமைதியோ அமைதி.. பத்தோடு பதினொன்றா அண்ணாமலை! அடுத்தகட்ட ஆபரேசன் எப்போது? ஆர்வத்தோடு ஆதரவாளர்கள்!
சென்னை: பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ள அண்ணாமலையின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வி தற்போது தமிழக அரசியலில் அதிகமாக பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. குறிப்பாக, மிகக் குறுகிய காலத்தில் லட்சக்கணக்கான உறுப்பினர்களை இணைத்திருப்பது அவரது அரசியல் பயணத்தின் அடுத்த அத்தியாயம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஆனால், இதுகுறித்து எதுவுமே பேசாமல் அண்ணாமலை அமைதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை, விருப்ப ஓய்வு பெற்று அரசியலுக்கு வந்தபோது, தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று பலரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு அவரது செயல்பாடுகள் அதிரடியாக இருந்தது.

மக்கள் பிரச்சினைகளை நேரடியாக பேசுவது, அடிக்கடி செய்தியாளர்களை சந்திப்பது, மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு ஆதரவு வட்டாரத்தை உருவாக்கினார்.
அண்ணாமலை
குறிப்பாக, அவரது "என் மண் என் மக்கள்" நடைப்பயணம் மற்றும் ஆளும் கட்சியை விமர்சிக்கும் அரசியல் பாணி பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஆனால், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் அண்ணாமலையின் பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தன. கூட்டணி அரசியல், தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. பின்னர், கட்சியிலிருந்தும் வெளியேறி புதிய இயக்கத்தை தொடங்கினார்.
இது நம்ம இயக்கம்
கடந்த ஜூன் 5ஆம் தேதி தொடங்கப்பட்ட "இது நம்ம இயக்கம்" என்ற அமைப்பு மிகக் குறுகிய காலத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே லட்சக்கணக்கானோர் பதிவு செய்த நிலையில், தற்போது உறுப்பினர் எண்ணிக்கை 18.5 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கூறுவதாவது, இது வெறும் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் அல்ல. எதிர்கால அரசியல் கட்சிக்கான அடித்தள பணியாகவே இதை பார்க்க வேண்டும் என்பதாகும். அதனால்தான் உறுப்பினர்களை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு அரசியல் பயிற்சியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அரசியல் பயிற்சி மையம்
இதற்காக கோவையில் அரசியல் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் முதல் நாடாளுமன்றத் தேர்தல் வரை போட்டியிட விரும்புபவர்கள் அரசியல் பயிற்சி பெற வேண்டும் என்ற கருத்தை அண்ணாமலை முன்வைத்திருப்பது மற்ற கட்சிகளிலிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டுகிறது. அதேநேரத்தில், அண்ணாமலையின் இயக்கத்தில் பாஜகவைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள் இணைந்திருப்பதும் கவனிக்கத்தக்கதாக உள்ளது.
மாநில அளவிலான தலைவர்கள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் எதிர்காலத்தில் மேலும் பல அரசியல் பிரமுகர்கள் அவரது இயக்கத்தில் இணையக்கூடும் என்ற பேச்சும் எழுந்துள்ளது. அரசியல் பார்வையாளர்கள் சிலர், தமிழக அரசியல் தற்போது புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளதாக கூறுகின்றனர். நீண்ட காலமாக திமுக - அதிமுக மையமாக இருந்த அரசியல் போட்டி, சமீப ஆண்டுகளில் தவெகவின் எழுச்சியால் மாறியுள்ளது.
அரசியல் கட்சி
தற்போது அண்ணாமலையின் புதிய இயக்கமும் களத்தில் இறங்கியிருப்பதால் எதிர்கால அரசியல் முற்றிலும் வேறுபடக்கூடும் என அவர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், அண்ணாமலை தனது இயக்கத்தை எப்போது அரசியல் கட்சியாக மாற்றப் போகிறார் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. ஆரம்பத்தில் செப்டம்பர் மாதத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்கள் பரவின. ஆனால், உறுப்பினர் எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டிய பிறகே அடுத்த கட்ட முடிவுகள் குறித்து அறிவிக்கப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
உறுப்பினர் எண்ணிக்கை
இதனால் தற்போது அனைவரின் பார்வையும் ஒரே கேள்வியில் குவிந்துள்ளது. 18 லட்சத்தை கடந்துள்ள உறுப்பினர் எண்ணிக்கை 50 லட்சத்தை எப்போது தொடும்? அதற்குப் பிறகு அண்ணாமலை புதிய அரசியல் கட்சியை அறிவிப்பாரா? அல்லது அதற்கு முன்பே தமிழக அரசியலில் அடுத்த அதிரடி நகர்வை மேற்கொள்வாரா? இந்த கேள்விகளுக்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை.
தமிழக அரசியல்
ஆனால் ஒன்று மட்டும் உறுதி. அண்ணாமலையின் அடுத்த அரசியல் நகர்வை தமிழ்நாடு மட்டுமல்ல, டெல்லி அரசியல் வட்டாரங்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. அவரது புதிய இயக்கம் தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுக்குமா? அல்லது பத்தோடு 11 என்ற அளவிலேயே நின்று விடுமா என்பதற்கான பதிலை காலம் தான் தீர்மானிக்கும்..












Click it and Unblock the Notifications