இதை நினைக்கும்போது எனக்கு ஒரு ரஷ்யக் கதை நினைவுக்கு வருகிறது...!

ஜெயலலிதா சொன்ன கதை...
இதை நினைக்கும் போது எனக்கு ஒரு ரஷ்யக் கதை நினைவிற்கு வருகிறது. ஒரு பெரிய நினைவு மண்டபம் முன்பு தந்தையும் மகனும் நின்று கொண்டிருந்தார்கள். அந்த வழியாக சென்றவர்கள் அனைவரும் ‘‘அது என்ன மண்டபம்?'' என்று விசாரித்தார்கள். ‘‘இந்த இடத்தில் ஒரு பெரிய மகான் சமாதி ஆகியிருக்கார். அதை நினைவு மண்டபமாக கட்டி இருக்கிறோம். இந்த இடத்தில் உட்கார்ந்தாலே மன நிம்மதி கிடைக்கும்'' என்று சொன்னார்கள். அங்கு ஒரு உண்டியலையும் வைத்தார்கள்.
இதை உண்மை என்று நம்பி அந்த வழியாக செல்பவர்கள் அங்கு சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு அந்த உண்டியலில் காசையும் போட்டார்கள். பணம் நிறைய சேர்ந்தது. தந்தைக்கும், மகனுக்கும் தகராறு வந்தது.
தந்தை மகனைப் பார்த்து, ‘‘நாம் சண்டை போட்டால் மற்றவர்கள் நம்மை தவறாக நினைப்பார்கள். எனவே, நான் உனக்கு ஒரு கழுதையையும், பணத்தையும் தருகிறேன். இதை வைத்து நீ தனியாக பிழைத்துக் கொள்'' என்றார்.
மகனும் அதற்கு சம்மதம் தெரிவித்து, கழுதையை அழைத்துக் கொண்டு அடுத்த ஊருக்கு சென்றான். வழியிலேயே அந்தக் கழுதை இறந்து விட்டது. உடனே மகனுக்கு ஒரு யோசனை பிறந்தது. அந்தக் கழுதையை சாலை ஓரத்தில் புதைத்தான். கையிலே இருந்த பணத்தை வைத்து அந்த இடத்தில் ஒரு சிறிய மண்டபம் கட்டினான்.
அந்த வழியாக செல்பவர்களிடம் இது ஒரு பெரிய மகானின் சமாதி என்று வழக்கம் போல கூறினான். கூட்டம் சேர ஆரம்பித்தது. உண்டியலில் பணமும் சேர்ந்தது. தந்தையை விட மகன் பெரிய ஆளாகி விட்டான்.
மகனின் வளர்ச்சியை கேள்விப்பட்ட தந்தை, ஒரு நாள் மகனைப் பார்க்கச் சென்றார். மகனைப் பார்த்து, ‘‘எப்படி இவ்வளவு பணம் சம்பாதித்தாய்?'' என்று வினவினார். அதற்கு மகன், ‘‘எல்லாம் உங்க ஆசீர்வாதம்'' என்று கூறினான்.
‘அது எப்படி?' என்று கேட்டார் தந்தை.
அதற்கு மகன், ‘‘நீங்க கொடுத்த கழுதை இறந்து விட்டது. அதை இங்கு புதைத்து, நீங்க கொடுத்த பணத்தை வைத்து மண்டபம் கட்டினேன். இது ஒரு பெரிய மகானின் சமாதி என்று அனைவரிடமும் கூறினேன். ஒரு உண்டியலையும் வைத்தேன். மக்களும் அதை உண்மை என்று நம்பி காசை கொட்ட ஆரம்பித்தார்கள். நான் பணக்காரனாகி விட்டேன்'' என்று தந்தையிடம் கூறினான்.
உடனே தந்தை, ‘‘இப்ப தான்டா நீ என் பிள்ளை'' என்று மகனிடம் சொல்லி மகிழ்ச்சி அடைந்தார். ‘‘ஏன் இப்படி சொல்கிறீர்கள்?'' என்று மகன் தந்தையிடம் வினவினான். அதற்குத் தந்தை, ‘‘நீ இப்ப கழுதைக் குட்டியை புதைத்து மண்டபம் கட்டியிருக்கே. நம்ம ஊரில் நாம் கட்டி இருக்கிறோமே அந்த மண்டபம் அது இந்தக் கழுதைக் குட்டியோட தாயை புதைத்த இடம். அது ஒரு மகானின் சமாதி என்று அப்பகுதி மக்களிடம் பொய் சொல்லி தான் காசு சம்பாதித்து கொண்டு இருக்கிறேன்'' என்று மகனிடம் கூறினார் என்றார் ஜெயலலிதா.
திமுக தலைவர் கருணாநிதியையும், பொருளாளர் மு.க.ஸ்டாலினையும் சுட்டிக் காட்டி இந்தக் கதையைக் கூறினார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications