தமிழகத்துக்கு ரூ. 37,128 கோடி...கடந்த ஆண்டைவிட ரூ.9,128 கோடி அதிகம்!

தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்வதை இறுதி செய்ய மத்திய திட்டக் குழுக் கூட்டம் டெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய திட்டக் குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, தமிழக முதல்வர் ஜெயலலிதா, நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரை:
2012-13-ஆம் ஆண்டு தமிழகத்தில் சென்னையைத் தவிர பிற மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டன. கடந்த ஆண்டு தமிழக திட்டங்களுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் சுமார் 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், அவ்வப்போது டீசல் விலையை உயர்த்துவது, தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் மண்ணெண்ணெய்யின் அளவைக் குறைப்பது போன்றவற்றால் மாநில அரசின் நிதிச் சுமை அதிகரிக்கிறது.
மத்திய அரசு செயல்படுத்தும் 25 நலத் திட்டங்களின் பயனாளிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் முறையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதற்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், மாற்றுப் பெயரில் மாநில அரசு செயல்படுத்தும் திட்டத்துடன் மத்திய அரசின் சில திட்டங்கள் ஒத்துப்போகின்றன.
ஆகையால், மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை நேரடியாக மாநில அரசுகளிடம் வழங்கி செயல்படுத்த வேண்டும். அதை மத்திய அரசு தீவிரமாக கண்காணிக்கலாம்.
நதி இணைப்புத் திட்டத்துக்கு நிதி
தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டத்துக்காக நிகழ் நிதியாண்டில் ரூ. 700 கோடியைச் செலவிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தின் நதி இணைப்புத் திட்டங்களுக்காக ரூ. 41,250 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் நான் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, மாநில மின் நிறுவனங்கள் ரூ. 40,000 கோடி கடன் சுமையில் இருந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளாக மின் நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தொடங்கப்படும் நீர், அனல் மின் நிலையங்கள் மூலம் தமிழகத்துக்கு மேலும் 3,230 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்கு தேவைப்படும் நிலக்கரி ஒதுக்கீட்டைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்
சென்னையின் குடிநீர்த் தேவைக்காக தென் சென்னை, பட்டிபுலத்தில் நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை ரூ.2,500 கோடியில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கடல் நீரை குடிநீராக்கும் மேலும் ஐந்து திட்டங்கள் ரூ. 700 கோடியில் செயல்படுத்தப்படுகின்றன. அதற்கு ரூ. 210 கோடியை மத்திய திட்டக்குழு ஒதுக்க வேண்டும்.
மொத்தத்தில் 2013-14-ஆம் நிதியாண்டுக்கு தமிழகத்துக்கு ரூ. 37,000 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக மாநில அரசுடன் செயல்படுத்தும் திட்டங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார் ஜெயலலிதா.
37,128 கோடி ஒதுக்கீடு
இதனையடுத்து 2013 - 14-ஆம் நிதியாண்டுக்கு ரூ. 37,128 கோடியை மத்திய திட்டக் குழு ஒதுக்கீடு செய்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ. 9,128 கோடி அதிகமாகும்.
தற்போதைய ஒதுக்கீட்டில் மத்திய அரசு தனது பங்காக ரூ. 12,000 கோடியை தமிழகத்துக்கு வழங்கும். மீதமுள்ள தொகையை, தமிழக அரசு தனது திட்டங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் பயன்படுத்திக் கொள்ளும் என்று கூட்டத்துக்கு பிறகு மத்திய திட்டக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Planning commission on Monday approved Tamil Nadu's Rs. 37,128 crore annual plan for 2013-2014.












Click it and Unblock the Notifications