சென்னை மெரினா கடற்கரை கடைகளை ஒழுங்குபடுத்துகிறது மாநகராட்சி
சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை ஒழுங்குபடுத்தும் புதிய திட்டத்தை சென்னை மாநகராட்சி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
மெரினா கடற்கரையில் கடற்கரை மணல் பகுதி முழுவதும் தின்பண்டங்கள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள் என மொத்தம் சுமார் 1489 பேர் பல்வேறு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு தினமும் சுமார் ஒரு லட்சம் பொதுமக்கள் கூடுகின்றனர்.
கடற்கரையில் வியாபாரம் செய்வோரால் கடற்கரை பகுதியின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. அந்தக் கடைகளை ஒழுங்குபடுத்துவது மிகவும் அவசியமாகிறது. ஆகவே, மாநகராட்சி நிர்வாகம் புதிய திட்டத்தை வகுத்துள்ளது. இந்தப் புதிய திட்டத்தின்படி உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை பின்புறம் உள்ள மணல் பகுதியில் மட்டுமே இனி கடைகள் அமைக்க முடியும்.
கடற்கரை மணல் பகுதி முழுவதும் கடை நடத்துவோர் அங்கிருந்து மாற்றப்பட்டு, இந்த இரண்டு இடங்களில் மட்டுமே வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த இரண்டு இடங்களிலும் 1,500 வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்க முடியும்.
இந்த இரண்டு இடங்கள் தவிர கடற்கரை பகுதியில் வேறு எங்கும் கடைகள் நடத்த அனுமதி இல்லை. மேலும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு அவர்கள் மட்டுமே கடை வைக்க அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.
அவ்வாறு அனுமதிக்கப்படும் இடங்களில் தள்ளு வண்டிகளில் மட்டுமே கடை நடத்த அனுமதி தரப்படும். நிரந்தர கட்டுமானங்கள் அமைத்து கடை நடத்த அனுமதி தரப்பட மாட்டாது. இதனைக் கண்காணிக்கவும், ஒழுங்குபடுத்தவும் போதுமான எண்ணிக்கையில் பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.
மேலும் நிர்ணயிக்கப்படும் நேரத்தில் மட்டுமே வியாபாரம் செய்ய முடியும். கடற்கரை பகுதியில் கடை நடத்துவோரிடமிருந்து உரிய கட்டணத்தை மாநகராட்சி வசூல் செய்யும் என்று மாநகராட்சியின் புதிய திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையின் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் அங்கு ஏராளமான கடைகள் நடத்தப்படுகின்றன. சுகாதாரமற்ற, தரமில்லாத உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை தடுக்க சம்பந்தப் பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று காந்திஜி நுகர்வோர் இயக்கத்தின் தலைவரான வழக்கறிஞர் கே. பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனு கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் வியாழக்கிழமை இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மெரினா கடற்கரையில் செயல்படுத்தவுள்ள புதிய திட்டத்தை நீதிமன்றத்தில் மாநகராட்சி நிர்வாகம் தாக்கல் செய்தது.












Click it and Unblock the Notifications