கனமழை எதிரொலி: கர்நாடக அணைகள் வேகமாக நிரம்புகின்றன
மைசூர்: கர்நாடகாவில் பெய்து வரும் கன மழையால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
கர்நாடக மாநிலத்தில் உள்ள அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை நீடித்துள்ளதால் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணிகள் மளமளவென நிரம்பி வருகின்றன.
கிருஷ்ணராஜசாகர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 78 புள்ளி 70 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 2 ஆயிரத்து 420 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு ஆயிரத்து 177 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கபினி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையிலிருந்து விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்த நீர் மைசூர், மாண்டியா மற்றும் பெங்களூரு மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் திறந்து விடப்படுவதாக கர்நாடக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இன்னும் மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணை நிரம்பும் பட்சத்தில் காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications