ராஜ்யசபா தேர்தல்.. திமுக Vs தேமுதிக.. யாரை ஆதரிக்கப் போகிறது காங்கிரஸ்?

தமிழகத்தைச் சேர்ந்த 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைவதால் வரும் 27-ந் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதிமுக அணியின் 5 வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 6 வது எம்.பி. இடத்துக்கு திமுகவின் கனிமொழியும் தேமுதிகவின் இளங்கோவனும் போட்டியிடுகின்றனர். இதனால் வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது.
23 எம்.எல்.ஏக்களைக் கொண்ட திமுகவுக்கு தலா 2 எம்.எல்.ஏக்களைக் கொண்ட மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் 27 எம்.எல்.ஏக்களின் ஆதரவு திமுகவுக்கு உள்ளது. 3 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருந்த பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
தேமுதிகவுக்கு 29 எம்.எல்.ஏக்கள் இருந்த போதும் 7 பேர் அதிருப்தி அணிக்கு தாவிவிட்ட நிலையில் 22 பேர்தான் உள்ளனர்.
இந்நிலையில்தான் திமுகவும் தேமுதிகவும் 5 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கும் காங்கிரஸ் ஆதரவைக் கோரி நிற்கின்றன. திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு, காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராணுவ அமைச்சர் ஏ.கே.ஆண்டனி ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரியிருக்கிறார்.
தேமுதிக தரப்பில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்தின் மைத்துடன் சுதீஷ் டெல்லியில் டேரா போட்டு காங்கிரஸ் ஆதரவுக்கு காய் நகர்த்தி வருகிறார்.
ஆனால் காங்கிரஸோ, லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் நமக்கு லாபம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது. அதிக வாக்கு சதவீதம் கொண்ட திமுகவுடன் கூட்டணி அமைப்பதா? அல்லது குறைவான வாக்கு சதவீதம் இருந்தாலும் நிச்சயம் லாபம் கிடைக்கும் என்பதால் தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பதா? என்று ஆலோசித்து வருகிறது. இந்த ஆலோசனையின் முடிவில்தான் ராஜ்யசபா தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று காங்கிரஸ் அறிவிக்கும்.
அனேகமாக இன்று மாலை காங்கிரஸ் கட்சி யாருக்கு ஆதரவு என்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications