“போஸ்டர் ஒட்டுனவங்க, பிளாக்ல டிக்கெட் வித்தவங்க.. தான் இப்போ அமைச்சரா?” ஜேம்ஸ் வசந்தன் பேச்சால் சூடான விஜய் அரசு
சென்னை: தமிழக அரசியலில் நடிகர் விஜய் முதல்வராக பதவியேற்றதிலிருந்து, அவரது ஒவ்வொரு அரசியல் நகர்வும் பெரிதாகவே கவனிக்கப்படுகிறது. குறிப்பாக அவர் அமைத்த அமைச்சரவை, கட்சியின் கூட்டணி விரிவாக்கம், அரசு எடுக்கும் முதல் கட்ட முடிவுகள், எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகள் என அனைத்தும் தொடர்ச்சியாக விவாதமாகிக் கொண்டிருக்கின்றன. இப்படியான சூழலில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேசிய சில வார்த்தைகள் தற்போது சமூக வலைதளங்களில் புதிய புயலை கிளப்பியிருக்கின்றன.
விஜய் மற்றும் அவரது அரசியல் பயணத்தை ஆரம்பத்திலிருந்தே விமர்சித்து வரும் ஜேம்ஸ் வசந்தன், இந்த முறை நேரடியாக விஜய் தலைமையிலான அமைச்சரவை குறித்தே கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார். விஜயை முதல்வர்னு சொல்றதுக்கு வேற வழியே இல்லாம தேர்ந்தெடுக்கப்பட்ட அவரின் அமைச்சர்களை அமைச்சர் என்று சொல்வதற்கு ஏத்துக்க மனசு தயங்குகிறது என்ற தொனியில் அவர் கடுமையாக விமர்சித்திருப்பது தான் இப்போது விவாதத்தின் மையமாக மாறியுள்ளது.

ஜேம்ஸ் வசந்தன் நேரடி தாக்கு
ஜேம்ஸ் வசந்தன் கூறியதாக வைரலாகி வரும் கருத்துகளில், அவர் விஜயின் அமைச்சர்களை கடுமையாக சாடியிருக்கிறார். சமூக சேவை நோக்கத்தோடு மக்கள் பிரச்சனைகளை புரிந்து கொண்டு அரசியலுக்கு வந்தவர்கள் அல்ல; விஜய்க்கு போஸ்டர் ஒட்டியவர்கள், பிளாக் டிக்கெட் விற்றவர்கள், தியேட்டரில் விசில் அடித்தவர்கள் தான் இன்று அமைச்சரவை இருக்கைகளில் அமர்ந்திருக்கிறார்கள் என்ற ரீதியில் அவர் தாக்கியிருக்கிறார்.
அதிலும், "ஒரு நடிகர் முதல்வர் ஆனதால், அவரைச் சுற்றியவர்கள் அமைச்சராகிவிட்டார்கள்; அந்த அமைச்சர்களில் பெயர்களே விஜய்க்கு முழுமையாக தெரியுமா என்பது கூட சந்தேகம்" என்ற அளவுக்கு அவர் பேசியிருப்பதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதோடு மட்டும் நின்றுவிடாமல், "அப்படிப்பட்ட தலைவரிடம் இருந்து கோமாளிகளைத் தானே எதிர்பார்க்க முடியும்" என்ற கமெண்டும் இணையத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் விமர்சனங்கள் தமிழ்நாட்டில் புதிதல்ல. ஆனால் சினிமா துறையிலிருந்து வரும் ஒருவர், அதுவும் பொதுவாக கலாச்சாரம், இசை, கல்வி, சமூக கருத்துகள் குறித்து பேசிக்கொண்டிருக்கும் ஜேம்ஸ் வசந்தன், இவ்வளவு நேரடியாக ஒரு முதலமைச்சரையும் அவரது அமைச்சர்களையும் குறிவைத்து பேசியிருப்பது தான் இந்த விவகாரத்தை இன்னும் பெரியதாக மாற்றியுள்ளது.
பரபரப்பின் காரணம்
ஜேம்ஸ் வசந்தனின் இந்த விமர்சனம் வெறும் ஒரு தனிப்பட்ட கருத்தாக மட்டும் பார்க்கப்படவில்லை. காரணம், இது வெளியாகும் நேரம். விஜய் தலைமையிலான அரசு பதவியேற்று ஒரு மாதத்தை தாண்டியுள்ள நிலையில், "முதல் மாத ஆட்சி எப்படி போகிறது?", "விஜய் உண்மையில் நிர்வாகத்தை கையாள்கிறாரா?", "அமைச்சர்களுக்கு துறை பற்றிய பிடி இருக்கிறதா?" போன்ற கேள்விகள் ஏற்கனவே அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் சுழன்றுகொண்டிருக்கின்றன.
விஜய் அரசு அமைந்த பிறகு கூட்டணி சமநிலைக்காக பல்வேறு கட்சிகளிலிருந்தும் அமைச்சர்கள் இணைக்கப்பட்டனர். காங்கிரஸ், ஐயூஎம்எல், விடுதலை சிறுத்தைகள் போன்ற கூட்டணி கட்சிகளுக்கும் இடம் அளிக்கப்பட்டது.
இதனால் அமைச்சரவை எண்ணிக்கை வேகமாக பெரிதானது. அதே நேரத்தில், "இந்த அமைச்சர்கள் யார்?", "அவர்களின் நிர்வாக அனுபவம் என்ன?", "இவர்கள் மக்கள் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா, இல்லையெனில் அரசியல் சமன்பாட்டுக்காக கொண்டு வரப்பட்டவர்களா?" என்ற கேள்விகளும் எழுந்தன. அந்தப் பின்னணியில்தான் ஜேம்ஸ் வசந்தனின் இந்த பேச்சு கூடுதல் கவனம் பெறுகிறது.
விமர்சனங்கள்
விஜய் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, அவரது ஆட்சியைச் சுற்றி பலவிதமான விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் இருந்தே எதிர்க்கட்சிகள், "திரை உலகக் கவர்ச்சி அரசியலாக மாறிவிட்டது; ஆனால் நிர்வாகம் வேறு விஷயம்" என்று கூறி வந்தன. அதற்கிடையில், சில அரசுத் திட்டங்கள் பெயர் மாற்றம், வெள்ளை அறிக்கை வெளியீடு, கூட்டணி அரசியல் சமநிலைகள், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம், பத்திரிகையாளர்களை சந்திக்காத முதல்வர் என்ற விமர்சனம் போன்ற பல விஷயங்களும் விஜய் அரசுக்கு எதிராக பேசப்பட்டன.
முக்கியமாக, "விஜய் நேரடியாக மக்களிடம் பேசுவதற்குப் பதிலாக, அவரைச் சுற்றியவர்கள்தான் அதிகமாக பேசுகிறார்கள்" என்ற விமர்சனமும் கடந்த சில வாரங்களாக வலுப்பெற்று வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், "விஜய்க்கே அமைச்சர்கள் பெயர் தெரியுமா?" என்று ஜேம்ஸ் வசந்தன் கேள்வி எழுப்பியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.













Click it and Unblock the Notifications