உத்தரகண்ட் மீட்புப்பணி முடிந்தும் முடியாத துயரம்… 3,000 பேர் காணவில்லை
கேதார்நாத்: உத்தரகாண்டில் மீட்புப்பணி இன்று முடிவடைகிறது. இதுவரை 1 லட்சத்து 4 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் 3000 பேரை காணவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 16, 17-ந்தேதிகளில் ஏற்பட்ட ஹிமாலய சுனாமி அங்குள்ள புனிதத்தலங்களை புரட்டிப் போட்டு விட்டன. லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கினர். 2,052 வீடுகள் தரைமட்டமாகி விட்டன. 200 கிராமங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. 147 பாலங்கள் பழுது அடைந்தன. 1,307 ரோடுகள் கடும் சேதத்துக்குள்ளாகி உள்ளன.
கேதார்நாத்தில் மட்டும் பல்லாயிரம் பேர் பலியாகி இருக்கக்கூடும் என நம்பப்படுகிற வேளையில், 842 பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.

மீட்புப்பணிகள்
புனிதத்தலங்களுக்குச் சென்ற பக்தர்கள் வெளியேற வழியின்றி ஆங்காங்கே தங்கிவிட்டனர். அவர்களை ராணுவத்தினரும், விமானப்படையினரும் மீட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில், உத்தரகாண்டில் இன்று (வெள்ளிக்கிழமை) மீட்புப்பணி முடிவடைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிவரை, மொத்தம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 95 பக்தர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வான்வழியாகவும், கால்நடையாகவும் மீட்கப்பட்டனர். 842 பேர் பலியானதாகவும், 3000 பேரை இன்னும் காணவில்லை என்றும் அதிகாரப்பூர்வமாக கணக்கிடப்பட்டு உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய துணைத்தலைவர் சசிதர் ரெட்டி கூறியுள்ளார்.

மழையால் பாதிப்பு
இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் கடந்த இரண்டு தினங்களாக தொய்வு ஏற்பட்டிருந்தது.
வானிலை மேம்பட்டவுடன் அங்கிருந்து 3 ஹெலிகாப்டர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு புறப்பட்டு சென்றன. மோசமான வானிலை காரணமாக வான்வழி மீட்பு பணி பாதித்திருப்பதால் மாற்று வழிகளும் நாடப்படுகின்றன.

ஹெலிகாப்டர் மீட்பு பணி
நேற்று காலை டேராடூன், பித்தோரகார், சமோலி மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் நேற்றும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.
பத்ரிநாத்துக்கு புறப்பட 14 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு வானிலை சீரடைந்ததும் மீட்புப்பணி தொடங்கும். சஹஸ்திரதாரா ஹெலிகாப்டர்தளத்தில் இருந்து மீட்பு பணிக்காக ஹெலிகாப்டர்கள் புறப்படுவது நேற்று காலை பாதித்தது.

மலைகளில் தவிப்பு
ஹார்சில் பகுதியில் இருந்து 208 பேர் மீட்கப்பட்டனர். அங்கு இன்னும் 600 பேர் சிக்கித் தவிக்கின்றனர். பத்ரிநாத் பகுதியில் இருந்து 350 பேரை மட்டுமே இப்போது மீட்க முடிந்தது. வானிலை சற்று மேம்பட்டு ஒரு மணி நேரம் கிடைத்தபோது, இவர்கள் மீட்கப்பட்டதாக விமானப்படை அதிகாரி ராஜேஷ் இஸ்ஸார் தெரிவித்தார்.

உயிரிழந்த வீரர்கள்
மீட்புப்பணியின்போது ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 20 வீரர்கள் பலியாகி உள்ளனர். அவர்களுக்கு டேராடூனில் வெள்ளிக்கிழமை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும். மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இந்த அணிவகுப்பு மரியாததையில் பங்கேற்பதற்தாக ராஜேஸ் இஸ்ஸார் கூறியுள்ளார்.

ஆற்றில் மாசு
இதற்கிடையே கேதர்நாத் புனித தலத்தையொட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் ஆற்று நீரை பயன்படுத்த வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். தண்ணீரில் உடல்கள் மிதந்து வந்ததாலும், அதில் அதிகளவு மாசு கலந்து விட்டதாலும்தான் அதிகாரிகள் ஆற்று நீரை பயன்படுத்த தடை விதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications