மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா மாற்றப்பட்ட பின்னணி என்ன?
மதுரை: மதுரைக் கலெக்டராக பணியாற்றிய அன்சுல்மிஸ்ரா இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னணியில் கிரானைட் குவாரி புள்ளிகளின் கைங்கரியம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற மோசடிகளை வெளியுலகிற்கு அம்பலப்படுத்தினார் கலெக்டராக பணிபுரிந்த சகாயம். அவர் இடமாற்றம் செய்யப்பட்டதும், அவர் இடத்திற்கு அன்சுல் மிஸ்ரா நியமிக்கப்பட்டார். அவர் மதுரை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றதும், சகாயத்தைப்போன்றே கிரானைட் மோசடி புள்ளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடருவாரா அல்லது நெருக்கடிகளுக்கு பணிந்துவிடுவாரா? என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்தது.
அந்த சந்தேகத்தைப் பொய்யாக்கும் வகையில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு குவாரிகளை அகற்றியதோடு, மோசடிகளில் ஈடுபட்டவர்களை சிறையில் தள்ளியது, பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிரானைட் கற்களை கைப்பற்றினார் மிஸ்ரா.
அதோடு மட்டுமல்லாது கிரானைட் மோசடி புள்ளிகளுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள் கட்டாயம் தொடரும். குற்றவாளிகள் தப்ப முடியாது" எனவும் தெரிவித்தார். திட்டவட்டமாக கூறிய அவர், அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
கிரானைட் மோசடிகளில் ஈடுபட்ட நிறுவனங்களிடமிருந்து கைப்பற்றப்பற்ற கிரானைட் கற்களை உலகளாவிய டெண்டர் கொடுத்து ஏலம்விடும் நடவடிக்கையை மேற்கொண்டார். மிஸ்ராவின் இந்த அதிரடி நடவடிக்கை கிரானைட் முதலைகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது போன்ற சர்வதேச டெண்டர் முறை வர ஆரம்பித்தால் தங்களால் இனிமேல் தொழில் செய்ய முடியாது என்று நினைத்த அவர்கள், உள்ளூர் அதிமுக புள்ளிகள் மற்றும் சில எம்.எல்.ஏ.க்களிடம் முறையிட்டு, மிஸ்ராவை மதுரையைவிட்டு தூக்க சொல்லியதாகவும், அதனைத் தொடர்ந்து மிஸ்ராவுக்கு எதிராக அதிமுக புள்ளிகள் ஆட்சி மேலிடத்திற்கு புகார்களை தட்டியதாகவும் கடந்த வாரம் தகவல் வெளியானது. இந்நிலையிலேயே அன்சுல் மிஸ்ரா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அன்சுல் மிஸ்ராவின் இடமாற்றம் கிரானைட் மோசடிகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய கலெக்டர் சுப்ரமணியன், கிரானைட் மோசடிப் புள்ளிகளுக்கு எதிராக சாட்டையை சுழற்றுவாரா? என்பதே இவர்களின் கேள்வியாகும்.












Click it and Unblock the Notifications