ஆர்ப்பரித்து ஆடி வரும் ஓடி வரும் காவிரி... ஓகனேக்கல்லில் சீறிப் பாயும் நீரால் மக்கள் மகிழ்ச்சி
ஓகனேக்கல்: கர்நாடகம் கைவிரித்தால் என்ன, நான் உங்கள் மனதைக் குளிர்விக்கிறேன் என்று கருணை பொங்க தமிழகத்திற்குள் பாய்ந்து வருகிறாள் காவிரி அன்னை...
காவிரியில் பொங்கி வரும் வெள்ளத்தால் ஓகனேக்கல் அருவிகளில் தண்ணீர் சீறிப் பாய்கிறது.
வினாடிக்கு 30,000 கன அடி வீதம் காவிரியில் தண்ணீர் பொங்கிப் பெருக்கெடுத்து ஓடி வந்து கொண்டிருக்கிறது. இதனால் காவிரி டெல்டாப் பகுதி விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குடகு மலையிலிருந்து குதித்து வரும் காவிரி
காவிரி உற்பத்தியாகும் குடகு மற்றும் சுற்றுப் பகுதிகளில் மழை கொட்டித் தீர்க்கிறது. இந்த பலத்த மழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்துள்ளது. கர்நாடகத்தின் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

உபரி நீர் திறப்பு
அணைகளுக்கு அதிக அளவில் நீர் வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடகம், உபரி நீரை பெருமளவில் திறந்து விட்டுள்ளது.

அபரிமிதமான நீர்வரத்து
ஆரம்பத்தில் சிறிதளவே திறந்து விடப்பட்ட நீரை தற்போது அதிக அளவில் திறந்து விட்டு வருகிறது கர்நாடகம்.

வினாடிக்கு 30,000 கன அடி நீர்
தற்போது வினாடிக்கு 30,000 கன அடி நீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளது. இது ஓகனேக்கல்லை மூழ்கடித்து தமிழகத்திற்குள் சீறிப் பாய்ந்து வருகிறது.

குளிக்காதீங்க.. படகு ஓட்டாதீங்க...
அதிக அளவிலான தண்ணீர் வருவதால் ஓகனேக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், படகு ஓட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் மகிழ்ச்சி
காவிரியில் பொங்கிப் பெருகியபடி தண்ணீர் அபரிமிதமாக வருவதால் மேட்டூர் அணைக்கும் அதிக அளவிலான நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகளும், மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications