அரசு நிவாரணத்திற்காக செட்டப் மரணங்கள்... உத்தரகாண்ட் கலாட்டா
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் நிவாரண உதவி தொகையைப் பெறுவதற்காக ஏராளமானோர் பொய்யான தகவல்களை கொடுத்து உறவினர்கள் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்துவிட்டதாக செட்அப் செய்த தகவல் அம்பலமாகியுள்ளது.
கேதார்நாத், பத்ரிநாத் புனித தலங்களில் கடந்த 16ம் தேதி ஏற்பட்ட ஹிமாலய சுனாமியில் சிக்கி பலஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். உறவினர்களையும், உடமைகளையும் தொலைத்துவிட்டு வெறுங்கையுடன் திரும்பியவர்களும் உண்டு.
வெள்ளத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வரை நிவாரணத்தொகையாக உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த நிவாரணத்தைப் பெறுவதற்காக, ஏராளமானோர் பொய்யான தகவல்களை கொடுத்து வருவதாக தெரிகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு டேராடூன் காவல்நிலையத்தை அணுகிய நபர் ஒருவர், தனது பெற்றோர் புனித யாத்திரை சென்றதாகவும், ஹேமகுண்ட் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்து விட்டதாகவும் கூறினார். எனவே தனக்கு நிவாரணத் தொகையாக ரூ.5லட்சம் வழங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இறந்தவர்களின் டி.என்.ஏ வை சேகரித்து வைத்துள்ள போலீசார், பெற்றோர் இறந்துவிட்டதாக புகார் கொடுத்த நபரிடம் சோதனை மெற்கொண்டபோது அது பணத்திற்காக கொடுக்கப்பட்ட பொய்புகார் என்று தெரியவந்தது. புகார் கொடுத்த நபரின் பெற்றோர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே மரணமடைந்துவிட்டனர் என்றும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கங்கையில் மிதந்து வந்த சிதிலமடைந்த சடலங்களை கண்டெடுத்து உறவினர்கள் போல பொய் சொல்லி நிவாரணம் பெறுவதும் அதிகரித்து வருவதாக டேராடூன் போலீசார் கூறியுள்ளனர்.
இதேபோல் பீகார் மாநிலத்தில் உள்ள பெற்றோர்களின் வீட்டிற்கு மனைவி குழந்தைகளை அனுப்பிவிட்ட ஒருவர், தனது மனைவியும், குழந்தைகளும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்து விட்டதாக ரிஷிகேஷ் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து பக்கத்து வீட்டினரிடம் விசாரித்த போது அது பொய்யான தகவல் என்று தெரியவந்தது.
உலகவங்கி குழு
இதனிடைய உலக வங்கி மற்றும் ஏசியன் டெவலப் மென்ட் வங்கியின் உயரதிகாரிகள் வெள்ளம் பாதித்த உத்தரகாண்ட மாநிலத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். இதனடிப்படையில் புணரமைப்புக்காக நிதி உதவி வழங்கப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications