இஷ்ரத் ஜஹானை கொன்றவர்களை தூக்கிலிடுங்கள்.. குடும்பத்தினர் கொதிப்பு
மும்பை: இஷ்ரத் ஜஹான் உள்ளிட்டோரை கொடூரமாகக் கொன்றவர்களை தூக்கிலிட்டுக் கொல்ல வேண்டும் என்று இஷ்ரத்தின் கு்டும்பத்தினர் ஆவேசமாக கூறியுள்ளனர்.
இளம் பெண் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் மூலம்தான் கொல்லப்பட்டார் என்று சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளது. அவர் எப்படிக் கொல்லப்பட்டார் என்பதையும் சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஷ்ரத்தின் குடும்பத்தினர் கோபத்துடன் கருத்து தெரிவித்துள்ளனர். தங்களது பெண்ணை கொடூரமாகக் கொன்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

9 வருடமாக போராடி வருகிறோம்
இஷ்ரத்தின் சகோதரி கருத்து தெரிவிக்கையில், நாங்கள் 9 வருடமாக போராடி வருகிறோம். எனது சகோதரி அப்பாவி, அவர் கொல்லப்பட்டுள்ளார் என்று கூறி வருகிறோம்.

குடும்பத்துக்காக உழைத்த பெண்
எங்களது சகோதரி மிகவும் அன்பானவர். 2ம் ஆண்டு கல்லூரிப் படிப்பை படித்து வந்தார். படிப்புக்காகவே தனது நாட்களை செலவிட்டார்.

தந்தை ஸ்தானத்தில் குடும்பத்தைக் காத்தவர்
எங்களது தந்தை 2002ம் ஆண்டு இறந்து விட்டார். இதனால் குடும்பப் பொறுப்பை தானே சுமந்தவள் இஷ்ரத். கல்லூரி விட்டு வந்ததும் டியூஷன் எடுத்து அதை வைத்து எங்களது குடும்பத்தையும், தனது படிப்பையும் பார்த்துக் கொண்டவர்.

குற்றப்பத்திரிக்கை மகிழ்ச்சி தருகிறது
சிபிஐதாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கை எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது. இஷ்ரத் அப்பாவி என்பதை அது நிரூபிப்பதாக உள்ளது. ஆனால் அவளைக் கொன்றவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லையே...

தீவிரவாத முத்திரை அகன்றது மகிழ்ச்சி
எங்களது சகோதரி மீதும், குடும்பத்தினர் மீதும் படிந்த தீவிரவாத முத்திரை அகன்றுள்ளது சந்தோஷம் தருகிறது.

இது சாதாரணர்களின் போராட்டம்
இது எங்களது போராட்டம் அல்ல, முஸ்லீம்களின் போராட்டம் அல்ல, சாதாரண அப்பாவி ஜனங்களின் போராட்டம்.

தூக்கிலிடுங்கள்
இஷ்ரத்தைக் கொன்ற யாரும் தப்பக் கூடாது. அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதித்து நிறைவேற்ற வேண்டும்.

தூக்குத் தண்டனை வேண்டும்
இஷ்ரத்தின் தாயார் கூறுகையில், இந்த குற்றப்பத்திரிக்கை முழு சந்தோஷம் தரவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால்தான் முழுமையான திருப்தி ஏற்படும். எனது மகளைக் கொன்றவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications