லோனை திருப்பி கட்டாதவர்கள் மீது நடவடிக்கை எடுங்கப்பா...: வங்கிகளுக்கு சிதம்பரம் உத்தரவு
டெல்லி: வங்கிகளில் வாங்கிய கடன்களை திரும்பச் செலுத்தாதவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில், நேற்று பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுடனான முக்கிய ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
அதில், விவசாயத்துக்கு வழங்கக்கூடிய கடன்கள், வீட்டுவசதி கடன்கள், கல்விக் கடன்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தின்போது வங்கிகள் வாராக்கடன்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

வாராக் கடன்கள் :
இது குறித்து ப.சிதம்பரம் கூறியதாவது, ‘ 30 வாராக்கடன் (வசூல் ஆகாத கடன்கள் வாராக்கடன்கள் என அழைக்கப்படுகின்றன.) கணக்குகளில்தான் அதிகபட்ச கடன் நிலுவையில் உள்ளது.
வங்கிகள் அதிகளவு வாராக்கடன்களை வசூலிப்பதில் கவனத்தை செலுத்த வேண்டும். அதிகளவில் பணத்தை திருப்பிச்செலுத்துபவர்களின் கணக்குகளிலும் கண் வைத்துக்கொள்ள வேண்டும். வாராக்கடன்களை கண்காணித்து வர வேண்டும். கடன்களை திருப்பிச்செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை பாயும்.

அதிகரிக்கும் வாராக் கடன்கள் :
பொருளாதார மந்த நிலை காரணமாக, வங்கிகளின் வாராக்கடன்கள் கடந்த சில மாதங்களாக எகிறி வருகின்றன. கடந்த மார்ச் மாத நிலவரப்படி, இந்திய ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட சில பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் அளவு மொத்த (வங்கி) கடன் மதிப்பில் 4 சதவீதத்தை தாண்டி விட்டது.
2011-ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி, பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன்கள் ரூ.71 ஆயிரத்து 80 கோடி ஆகும். இது 2012 டிசம்பர் மாதத்தில் ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

வட்டி வீதம் குறைக்கப்படும் :
வங்கிகள் தாங்கள் அளிக்கிற கடன்களுக்கான வட்டிவீதத்தை குறைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளேன். அடிப்படை வட்டி வீதத்தை குறைப்பது கடன் வளர்ச்சி வீதம் அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். அடிப்படை வட்டி வீதத்தை குறைக்காத வரையில், வட்டி வீதம் குறைந்து விடாது. கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்து ரிசர்வ் வங்கி, அடிப்படை வட்டி வீதத்தை 1.25 சதவீத அளவுக்கு குறைத்தும்கூட வங்கிகள் 0.30 சதவீதம் அளவுக்கே குறைத்துள்ளன.

புதிய வங்கிகள் :
இந்த ஆண்டு 8 ஆயிரம் புதிய வங்கிக்கிளைகள் திறக்கப்படும். 50 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்படுவார்கள். 2013 மார்ச் மாதத்துடன் முடிந்த நிதி ஆண்டில் வங்கி டெபாசிட்டுகள் வளர்ச்சி மிதமாக இருந்துள்ளது. கடன் வளர்ச்சிவீதம் மந்தமாக இருந்தது. பொதுத்துறை வங்கிகள் டெபாசிட் 14.91 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டை விட இது சற்றே அதிகம். கடன் வளர்ச்சி வீதம் 15.62 சதவீதம். இது முந்தைய ஆண்டை விட குறைவு.

தேவை அதிகரிப்பு :
விவசாயம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், சில்லறை கடன்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. வீட்டு வசதி துறையில் நல்ல வளர்ச்சி காணப்படுகிறது. குறிப்பாக குடியிருப்புகளுக்கான வணிக ரீதியிலான வீட்டு வசதி துறை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. உள்கட்டமைப்பு துறையைப் பொறுத்தமட்டில், சாலை துறை, மரபுசாரா எரிசக்தித்துறையில் கடனுக்கு நல்ல தேவை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில், கடனுக்கான தேவை பெருகி உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications