பிறந்து 4 மணி நேரமே ஆன பெண் சிசுவை குப்பையில் வீசிய அவலம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே குப்பைத் தொட்டியில் கிடந்த பெண் சிசுவை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர் போலீசார்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கடைத்தெருவில் உள்ள குப்பைத் தொட்டியில் நேற்று ஒரு குழந்தை அழுவது போன்ற குரல் கேட்டு அப்பக்கம் சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். குப்பைத் தொட்டி உள்ளே எட்டி பார்த்த போது, உண்மையிலேயே அங்கு ஒரு பெண் சிசு கிடந்துள்ளது.
உடனடியாக அக்குழந்தை குறித்து மணமேல்குடி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் குப்பைத் தொட்டியில் கிடந்த அந்த குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அக்குழந்தை பற்றி மேற்கொண்டு விசாரணையில் இறங்கிய போலீசார், மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வந்த தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ராஜேந்திரபுரம் அருகே உள்ள உமா என்ற பெண், பிரசவம் முடிந்த நான்கு மணி நேரத்திலேயே வீடு செல்வதாக கூறி மருத்துவமனையிலிருந்து புறப்பட்டதைக் கண்டுபிடித்தனர்.
உமாவிற்கு பிறந்தது பெண் குழந்தை தான் என்பதும், குப்பையில் கிடந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தையும் பிறந்து கிட்டத்தட்ட 5 மணி நேரமே ஆனது என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதால், அக்குழந்தை உமாவினுடையதாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
உமாவைக் கண்டுபிடித்தால் உண்மைகள் பல வெளி வரும் என்பதால் போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications