இளவரசனின் முகத்தை கடைசியாகக் காண வருவாரா திவ்யா...?
தர்மபுரி: துணிச்சலுடன் கரம் பிடித்து, கலவரத்திலும் உறுதியாக நின்று, கடைசி வரை மீண்டும் வர மாட்டாளா என்று ஏங்கிப் போய் கடைசியில் உயிரிழந்து பிணமாகி விட்ட தனது காதல் கணவர் இளவரசனின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்க திவ்யா வருவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு இளவரசன் ஊர் மக்களிடம் நிலவுகிறது.
இளவரசன் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டதால் உடல் இன்னும் தர்மபுரி அரசு மருத்துவனை பிரேதக் கிடங்கிலேயே வைக்கப்பட்டுள்ளது. திவ்யா, தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். இளவரசன் மறைவுச் செய்தி அவரை சிதறடித்துள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தனது ஊரில் தங்கியுள்ளார்.

திவ்யாவுக்கு நேற்று மனநல மருத்துவத்துறை நிபுணர்கள் கவுன்சிலிங் கொடுத்தனர். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மனநலத்துறைத் தலைவர் டாக்டர் ரவிசங்கர், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மனநலத் துறைத் தலைவர் டாக்டர் ராஜேசுவரி ஆகியோர் திவ்யாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கவுன்சிலிங் கொடுத்தனர்.
அப்போது தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க், கோட்டாட்சியர் மேனகா ஆகியோர் உடன் இருந்தனர். கவுன்சிலிங் முடிந்ததும் அவர்களை புகைப்படம் எடுக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவர்களை பார்க்க பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது இளவரசன் மரணம் குறித்து திவ்யாவிடம் கேட்டபோது தற்போது எந்த கருத்தும் தெரிவிக்கும் அளவுக்கு மனநிலை இல்லை என்று மட்டும் தெரிவித்தார் திவ்யா.
இந்த நிலையில் இளவரசன் உடலுக்கு திவ்யா அஞ்சலி செலுத்த வரலாம் என்ற எதிர்ரபார்ப்பு தர்மபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்திருக்கும் மக்களிடையே நிலவியது. பத்திரிக்கையாளர்களும் காத்திருந்தனர். ஆனால் திவ்யா வரவில்லை.
அதேசமயம், இறுதிச் சடங்கு நடக்கும்போது திவ்யா வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், திவ்யா இறுதிச் சடங்குக்கு வர வேண்டும் என்று இளவரசன் குடும்பத்தாரும், ஊர் மக்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் திவ்யா இருக்கும் நிலையில் அவர் வருவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications