ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உதயம்? இம்மாத இறுதியில் அறிவிப்பு?
டெல்லி: ட்ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனி தெலுங்கானா மாநிலத்தை உருவாக்குவது பற்றி காங்கிரஸ் மேலிடம் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து இம்மாத இறுதியில் தெலுங்கானா மாநில உதயத்துக்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடக் கூடும் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள், ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.ஆண்டனி, ஆந்திர பிரதேச முதல்வர் கிரண்குமார் ரெட்டி, ஆந்திர துணை முதல்வர் தாமோதர் ராஜநரசிம்ஹா, மாநில காங்கிரஸ் தலைவர் போட்ஸா சத்யநராயணா மற்றும் ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான திக்விஜய்சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் லோக்சபா மற்றும் ஆந்திர சட்டசபை தேர்தலுக்கான வியூகங்களை ஆந்திர மாநில தலைவர்கள் கட்சி மேலிட நிர்வாகிகளிடம் கொடுத்தனர். மேலும் தெலுங்கானா தனி மாநிலம் அமைத்தால் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதை மாநில தலைவர்களிடம் ராகுல் காந்தி கேட்டிருக்கிறார். பின்னர் ஆந்திர மாநில முதல்வர் உள்ளிட்ட அம்மாநில நிர்வாகிகள் வெளியில் அனுப்பப்பட்டு காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் 45 நிமிடம் தனியே ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அப்போது ஆந்திராவை இரண்டு மாநிலங்களாக தலா 147 சட்டசபை தொகுதிகள், 21 லோக்சபா தொகுதிகளைக் கொண்டதாக பிரிப்பது பற்றி விவாதிக்கப்பட்டிருக்கிறது. தெலுங்கானா பகுதியுடன் ராயலசீமாவையும் இணைப்பது என்றும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலோசனையின் போதே தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகனின் தாயார் ஆகியோருடன் காங்கிரஸ் தலைவர்கள் தொலைபேசியில் பேசியுள்ளனர். தனி தெலுங்கானா உருவாக்கினால் தெலுங்கா ராஷ்டிரிய சமிதி கட்சியை காங்கிரஸில் இணைத்துவிடுவீர்களா? என்று சந்திரசேகர் ராவிடம் உறுதிமொழி கேட்கப்பட்டிருக்கிறது. இதேபோல் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸிடமும் உறுதி மொழி கேட்கப்பட்டதாக தெரிகிறது. அனேகமாக இம்மாத இறுதியில் தெலுங்கானா தனி மாநிலம் குறித்த அறிவிப்பை மத்திய அரசு அறிவிக்கலாம் என்றே டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே நேற்றைய ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய்சிங், தெலுங்கானா தனி மாநிலம் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் கட்சியின் செயற்குழு இறுதி முடிவு எடுக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications