மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்- காங்கிரஸ், சமாஜ்வாடி, கம்யூனிஸ்ட்
டெல்லி: குஜராத் கலவரம் தொடர்பான தனது மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை நியாயப்படுத்திப் பேசியுள்ள நரேந்திர மோடி, அதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் அஜய் மக்கான் செய்தியாளர்களிடம் கூறுகையில், "குஜராத் கலவரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மோடி தெரிவித்த கருத்து கடும் கண்டனத்துக்கு உரியது.
இது அவரது மூர்க்கத்தனமான சிந்தனையை வெளிப்படுத்துவதாகவும், இந்தியாவின் கொள்கைக்கு மாறாக இருப்பதையும் காட்டுகிறது. இதற்கு அவர் உடனடியாக மன்னிப்பு கேட்பது அவசியம்," என்றார் அவர்.

சமாஜவாதி கட்சி
சமாஜவாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் கமால் ஃபாரூக்கி கூறுகையில், "மோடியின் கருத்து மிகவும் வேதனை அளிக்கக் கூடிய, தேசத்தை அவமதிக்கும் வகையில் அமைந்த, மிகவும் வருத்தமளிக்கக்கூடிய கருத்தாகும். அவர் எவ்வளவு சீக்கிரம் மன்னிப்பு கேட்கிறாரோ அவ்வளவு நல்லது," என்றார்.

கம்யூனிஸ்ட்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் கூறுகையில், "வருத்தம் தெரிவிக்கும் வழக்கம் மோடிக்கு வருவதில்லை. அவர் கூறியுள்ள கருத்தில் அடிப்படையிலேயே தவறு உள்ளது. படுகொலையை அவர் தொடர்ந்து நியாயப்படுத்தி வருகிறார்,'' என்றார்.

உள ரீதியான சோதனை
ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான சிவானந்த திவாரி கூறுகையில், "நரேந்திர மோடியை உளரீதியான சோதனைக்கு உட்படுத்த வேண்டும். இது போன்ற ஒரு நபர் நாட்டின் பிரதமராக வந்தால் அது மிகவும் அபாயகரமான சூழ்நிலையாக இருக்கும்'' என்றார்.

டி. ராஜா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி ராஜா கூறுகையில், "நரேந்திர மோடியின் பேட்டி அபத்தமானது, கண்டனத்துக்குரியது. 2002-இல் குஜராத்தில் நடைபெற்ற மதக் கலவரத்தில் 2000-க்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டது அவரது தலைமையிலான ஆட்சியில்தான் என்பதை மோடி மறந்துவிட்டார்.
குஜராத் கலவரம் பற்றி கருத்துத் தெரிவிக்கும் போது, நாய்க் குட்டியை ஒப்பிட்டுப் பேசும் மோடி, அவருக்கும் குஜராத் கலவரத்துக்கும் தொடர்பே இல்லாதது போல வாதம் செய்கிறார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதுபோன்ற சர்ச்சைக்குரிய அபத்தமான பொறுப்பற்ற கருத்துகளைக் கூறும் மோடியை மக்கள் புறக்கணிக்க வேண்டும்," என்றார்.

பா.ஜ.க. விளக்கம்
மோடி கூறிய கருத்து குறித்து பா.ஜ.க. விளக்கமளித்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "மோடி கூறிய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதன் விளைவாக, தேவையற்ற சர்ச்சை எழுந்துள்ளது. நாய்க்குட்டி என்று அவர் குறிப்பிட்டது காரில் ஒரு மனிதர் அடிபடுவதைப் பற்றிதான்'' என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications