போலீஸ் தடையை மீறி 150 என்.எல்.சி. தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்!!
சென்னை: காவல்துறையின் தடையை மீறி என்.எல்.சி. தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
நெய்வேலி நிலக்கரி நிறுவனமான என்.எல்.சி.யின் 5% பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சென்னையில் நேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இப்பேச்சுவார்த்தையில் மத்திய தொழிலாளர் துணை தலைமை ஆணையர் வி.முரளி, உதவி ஆணையர் சிவராஜன், நெய்வேலி நிலக்கரி நிறுவன தலைமைப் பொதுமேலாளர் முத்து, என்.எல்.சி. அண்ணா தொழிலாளர், ஊழியர் சங்கம், என்.எல்.சி. தொழிலாளர் முன்னேற்ற பேரவை உள்ளிட்ட 16 சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்த இப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய என்.எல்.சி. அண்ணா தொழிலாளர், ஊழியர் சங்கத்தின் செயலாளர் ஆர்.உதயகுமார், என்.எல்.சி. தொழிலாளர் முன்னேற்றப் பேரவையின் வி.ஸ்ரீதரன் ஆகியோர், மத்திய அரசு தனது பங்கு விற்பனை முடிவைக் கைவிட வேண்டும். இந்தப் பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வாங்கும் முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும். இல்லையென்றால் எங்கள் வேலைநிறுத்தத்தைத் திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்க முடியாது என அவரிடம் தெரிவித்துவிட்டோம். நாங்கள் அறிவித்தபடியான காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றனர்.

இதனிடையே பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, என்.எல்.சி. தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை நெய்வேலி க்யூ பாலம் அருகே என்.எல்.சி. தொழிலாளர்கள் 150 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல்துறை தடை விதித்துள்ளது. இந்தத் தடையை மீறியும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுவதால் அங்கு பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications