தூத்துக்குடியில் கல்லா கட்டும் 'தடை செய்யப்பட்ட' பான்பராக், குட்கா விற்பனை
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா போன்ற போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா பொதுமக்கள் மற்றும் போதைப் பொருட்களால் சீரழியும் இளைஞர்களின் நலன் கருதி தமிழகத்தில் போதைப் பொருட்களான பான்பராக், குட்கா போன்றவற்றை விற்பதற்கு தடை விதித்துள்ளார்.
உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டத்தின் கீழ் புகையிலை மற்றும் நிகோட்டின் கலந்த இப்பொருட்களை விற்பதற்கு தமிழகம் முழுவதும் நிரத்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் புகையிலை கொண்டு தயாரிக்கப்படும் பான்மசாலா, குட்கா, பான்பராக், மாணிக்சந்த், ஹான்ஸ், கணேஷ், மாவா போன்ற போதை தரும் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்று அனைத்து கடைக்காரர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் உத்தரவை மீறி தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒரு சில கடைகளில் இந்த போதைப் பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் இவை தாரளமாக கிடைக்கின்றன. இதனால் இதனை உபயோகிப்பவர்கள் வழக்கம்போல வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
அரசின் உத்தரவை மீறி இந்த போதைப் பொருட்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்டும் என்று அறிவிக்கப்பட்டபோதும் சில கடைக்காரர்கள் அதிகாரிகளின் துணையோடு போதைப் பொருட்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். தூத்துக்குடி பேருந்து நிலையம் மற்றும் மாநகர பகுதிகள், ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம், காயல்பட்டணம், திருச்செந்தூர், கோவில்பட்டி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இவை தாராளமாக கிடைக்கின்றன.
போதைப் பொருட்களான இவற்றை விற்பனை செய்யக் கூடாது என்ற அறிவிப்பை கேட்டு மகிழ்ச்சியடைந்த மக்கள் அரசின் உத்தரவையும் மீறி விற்பவர்களால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசின் தடை உத்தரவால் ரூ.5க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த போதைப்பொருட்கள் ரூ.10 முதல் ரூ.20 வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
எனவே அரசின் உத்தரவையும் மீறி தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் இளைஞர்களை போதை பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசின் தண்டனை அறிந்தும் அச்சப்படாத வியாபாரிகள்:
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, நிகோட்டின் கலந்த போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனையுடன், அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது அதிரடியாக சோதனை மேற்கொண்டும் வருகின்றனர்.
இருந்தபோதும் இதனையெல்லாம் நன்கு அறிந்த சில கடைக்காரர்கள் அச்சம் கொள்ளாது போதைப்பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். அபராதம் விதித்தால் கட்ட வேண்டும் என்பதற்காகவே கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றோம் என்று சிலர் கறாராக கூறுவது வேடிக்கையாகவும் இருக்கிறது.












Click it and Unblock the Notifications