பெரும் பழியைத் தேடிக்கொள்வதில் அதிமுக அரசுக்கு அப்படி என்ன தான் ஆர்வமோ: கி. வீரமணி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அஇஅதிமுக ஆட்சியின்மீது பரவலாக - அழுத்தமாக ஒரு குற்றச்சாற்று ஆழமாகப் பதிந்துள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் - திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக முடக்குவது - முற்றிலுமாகப் புறக்கணிப்பது என்பதை அஇஅதிமுக அரசு ஒரு கொள்கைபோல பின்பற்றி வருகிறது.
தேர்தல் வரும் போகும் - ஆனால், ஆட்சி என்பது தொடர்ச்சியானது - நிர்வாகம் என்பது நிலையானது.
திமுக அரசின் சாதனைகளும் - அ.தி.மு.க. அரசின் வேதனையான செயல்முறைகளும்!
அஇஅதிமுக ஆட்சியின் நிலைப்பாடும், போக்கும் என்ன? ஆட்சி முறைக்கு உகந்த முறையில் அதன் அணுகுமுறையில்லை. எடுத்துக்காட்டாக 1200 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை - சட்டமன்றத்தைப் பயன்படுத்தாதது எந்த வகையில் சரி?
அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி அவருக்குப் பொருத்தமான நினைவுச் சின்னமாக திமுக ஆட்சியில் கட்டப்பட்ட நவீன வசதிகளைக் கொண்ட நூலகத்தை வேறு இடத்திற்கு மாற்றத் துடித்தது மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான ஆட்சி. நீதிமன்றத்தின் குறுக்கீட்டால் அது எடுபடவில்லை. ரூ.100 கோடி செலவில் உருவாக்கப்பட்ட அடையாறு தொல்காப்பியப் பூங்கா பாலையாகி விட்டது. தொல்காப்பியர் போய் வெறும் திடீரென்று அடையாறு பூங்காவாகப் பெயரளவில் உள்ளது. செம்மொழிப் பூங்காவும் சிதிலமடைந்து வருகிறது.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பெயரால் உருவாக்கப்பட்ட செம்மொழி நூலகத்தின் இன்றைய கதி என்ன? அந்த நூலகம் எங்கே இருக்கிறது? எந்த அளவிற்குப் பொதுமக்களுக்குப் பயன்படுகிறது? இந்தக் கேள்விகளுக்குத் திருப்தியான பதிலை தமிழக அரசால் கூற முடியுமா?
துறைமுகம் முதல் மதுரவாயல் வரை 19 கிலோ மீட்டர் தூரம் பறக்கும் சாலைத் திட்டம் போக்குவரத்துக் கண்ணோட்டத்திலும், வணிகக் கண்ணோட்டத்திலும் இந்தச் சாலை அதிமுக்கியமானது. 2009 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது இதற்கான அடிக்கல்லை நாட்டியவர் இந்தியாவின் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் (8.1.2009). ரூ.1815 கோடி ரூபாய்க்கான அருமையான திட்டம் இது.
அதன் பணிகள் சீராக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், ஆட்சி மாற்றம் காரணமாக இத்திட்டத்தின்மீது தடை என்ற வெட்டு வீழ்ந்துள்ளது.
2010 ஆம் ஆண்டில் பணிகள் தொடங்கப்பட்டு எட்டு மாதங்களில் வேக வேகமாகப் பணிகள் நடைபெற்றன. மொத்தம் 889 தூண்கள் என்றால், 120 தூண்கள் நிறுவப்பட்டன. அந்த வேகத்தில் பணிகள் தங்கு தடையின்றி மேற்கொண்டிருந்தால், இந்நேரம் பறக்கும் சாலைப் பாலத்தில் கனரக வாகனங்கள் கனஜோராகப் பயணித்திருக்கும். ஏற்றுமதி - இறக்குமதியால் அரசுக்கு வருவாய் வந்து குவிந்திருக்கும். சாலை விபத்துகளும் குறைந்திருக்கும்; (சாலை விபத்தில் தமிழ்நாடு தானே முதல் இடத்தில் இருக்கிறது). துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைப் பாலத்தையொட்டி மேற்கொள்ளப்படவிருந்த சென்னை துறைமுகத்தில் ரூ.3600 கோடி மதிப்பிலான மெகா சரக்குப் பெட்டக முனையம் (கண்டெய்னர் டெர்மினல்) அமைக்கும் பணி முடங்கியுள்ளது.
ரூ.415 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவிருந்த உலர் துறைமுகமும் நிறுத்தப்பட்டுள்ள நிலை!
இந்தத் திட்டம் முடக்கப்பட்டதால், ரூ.872 கோடி நட்டப்பட்டதாகக் கூறி ஒப்பந்தக்காரர் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் நட்ட ஈடு கோரியுள்ளார். இந்தச் சூழலில் திட்டத்திற்கு மூடுவிழா செய்யலாம் என்ற முடிவுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்திருப்பதாகச் செய்திகள் கசிகின்றன. கைக்கு வந்தது வாய்க்கு எட்டவில்லை எனும் கொடுமையை என்ன சொல்ல!
தமிழ்நாடு அரசின் ‘இடக்கு முடக்கான' அணுகுமுறைகளால் ஏழு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் முடக்கப்பட்டுவிட்டன.
தமிழ்நாடு அரசின் இத்தகு முறையற்ற அணுகுமுறைகள் மாநிலங்களவையில் புயலைக் கிளப்பியுள்ளது.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தையும் முடக்கியது அஇஅதிமுக அரசு தான். தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய திட்டங்கள் எல்லாம் கிடைக்காமல் போனதற்குக் காரணம் அஇஅதிமுக அரசு தான் என்ற பெரும் பழியைத் தேடிக் கொள்வதில் இவ்வரசுக்கு அப்படி என்னதான் ஆர்வமோ! பறக்கும் சாலை தொடர்பாக நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கை இழுத்தடிக்கும் வகையில் வாய்தாக்களை தமிழக அரசு வாங்கிக் கொண்டு இருக்கிறது - உயர் நீதிமன்றம் - தமிழக அரசைக் கடுமையாக எச்சரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறதே!
மக்கள் நல அரசு என்று பொதுவாகக் கூறப்படுவதுண்டு. ஆனால், அஇஅதிமுக ஆட்சி முறைக்கு இதற்கு எதிரான ஒரு பெயரைத்தான் மகுடமாகச் சூட்ட வேண்டும் போல் தோன்றுகிறது.
மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் மாண்புமிகு ஜி.கே.வாசன் அவர்கள் குறிப்பிட்டு இருப்பதும் கவனிக்கத்தக்கது.
‘‘மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம், தமிழக அரசால் தடை செய்யப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. துறைமுகத்திற்கும், மதுரவாயலுக்கும் இடையிலான முக்கியமான திட்டம் இது. இத்திட்டத்தை விரைவுபடுத்தும்படி மாநில அரசைப் பலமுறை கேட்டுக் கொண்டுள்ளோம். அண்மையில் இந்தத் துறையின் மத்திய அரசுச் செயலாளர், தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடமும் விவாதித்துள்ளார்'' என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சரே வருத்தப்பட்டுக் கூறியுள்ளாரே! பல பிரச்சினைகளில் மத்திய அரசைக் குறைகூறும் நாம், மத்திய அரசு குறைகூறும் வகையில் நடந்துகொள்ளலாமா?
பிரதமரின் ஆலோசகர் திரு.நாயர் தலைமையில் டில்லியிலிருந்து இரண்டு பேர் முதல்வரை பிரதமரின் தூதுவர்களாக இத்திட்ட Clearence-க்காக அனுப்பி வைத்ததும் பயனற்றதுதானா?
என்னே விந்தை!
அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் தான் அஇஅதிமுக அரசு இப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பது பொதுமக்களுக்கும் பரவலாகவே தெரிந்து வருகிறது. மேல்தட்டு ஊடகங்கள் இந்த ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டத் தயங்கலாம்; அதற்குப் பல்வேறு காரணங்களும் இருக்கலாம்.
திமுகவின் ஆர்ப்பாட்டம்!
வரும் 17 ஆம் தேதி திமுக இந்தப் பிரச்சினையை முன்வைத்து நெற்குன்றத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது. ஜனநாயக நெறிமுறையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய போராட்டங்கள் மக்கள் மத்தியில் புதிய சிந்தனைகளைத் தட்டி எழுப்பும் என்பதில் அய்யமில்லை!
அதிகாரம் கண்களை மறைக்கிறது
அதிகாரத்தில் இருக்கும்போது உண்மைகளைக் காண ஆட்சியாளர்களின் கண்கள் தயங்கக்கூடும். அது தான் ஆட்சிமீது மக்களுக்கு வெறுப்புப் புயலைக் கிளப்புவதற்குப் போதுமான கைமுதல் என்பதை மறக்க வேண்டாம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications