ஓமன் நாட்டில் இந்தியர்களிடம் ரூ. 66 கோடி சுருட்டிவிட்டு தப்பிய இந்தியப் பெண்!
மஸ்கட்: ஓமன் நாட்டில் இந்தியர்களிடம் ரூ. 66 கோடி வரை மோசடி செய்த பெண் அந் நாட்டைவிட்டுத் தப்பிவிட்டார். அவர் இப்போது கர்நாடக மாநிலம் மங்களூரில் வசிப்பதாகத் தெரிகிறது.
ஓமன் நாட்டில் பல்வேறு கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்றும் டெண்டர் தனக்குக் கிடைத்திருப்பதாகவும், இதற்காக நிதி திரட்டி வருவதாகவும், இந்த நிதிக்கு அதிக வட்டி தருவதாகவும் கூறி இந்தியர்களை அந்தப் பெண் ஏமாற்றியுள்ளார்.
போர்ஜரி செய்யப்பட்ட ஓமன் நாட்டு அரசின் ஆவணங்களைக் காட்டி இந்தியர்களை நம்ப வைத்துள்ளார்.

ஓமன் நாட்டின் பல்வேறு சர்ச்சுகள், பள்ளிகளுக்கு வந்து இந்தியர்களை சந்தித்து தனது திட்டம் குறித்துப் பேசியுள்ளார். இவரை நம்பிய பலரும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணம் தந்துள்ளனர். அதற்கு ரசீதுகளையும் தந்துள்ளார் அந்தப் பெண்.
இந்தப் பணத்துக்கு ஆரம்பத்தில் வட்டியையும் தந்துள்ளார் அந்தப் பெண். இதை நம்பி பலரும் மேலும் பணத்தை அவரிடம் தந்ததோடு, தங்களுக்குத் தெரிந்தவர்களையும் பணம் தர வைதத்துள்ளனர்.
இந் நிலையில் அந்தப் பெண்ணிடம் இருந்து வட்டி வருவது நின்றுள்ளது. இதையடுத்து முதலீடு செய்தவர்கள் அவரைத் தேட ஆரம்பித்துள்ளனர். அப்போது தான் அவர் ஓமனை விட்டு வெளியேறிவிட்டார் என்ற விவரம் தெரியவந்துள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சிலர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் பெண் இப்போது மங்களூரில் பதுங்கி இருப்பதாகத் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications