அபுதாபியில் தவித்த 28 தமிழர்கள்! உதவிக்கரம் நீட்டிய அய்மான் சங்கம் +வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம்!
அபுதாபி: அபுதாபியில் கூலி வேலைக்காக சென்று ஊதியம் கிடைக்காமல் உணவுக்கே சிரமப்பட்ட 28 தமிழர்களை, பாதுகாப்பாக மீட்டு உதவிக்கரம் நீட்டிய அய்மான் சங்கம் அவர்களை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அபுதாபியில் தவித்த தமிழர்கள்: மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த 28 தொழிலாளர்கள், விசிட் விசா மூலம் கடந்த ஏப்ரல் மாதம் அபுதாபி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றிருக்கின்றனர். அதன் பின்னர் அவர்களுக்கு வேலைவாய்ப்பு விசாவும் வழங்கப்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் மதுரை மேலூரை சேர்ந்த தங்கம் என்ற ஏஜெண்ட் மூலம் கம்பி கட்டுதல் உள்ளிட்ட வேலைகளுக்காக அபுதாபி அனுப்பி வைக்கப்பட்டவர்கள் ஆவர்.

உணவுக்கு சிரமம்: ஆரம்பத்தில் ஓரிரு மாதங்கள் மிகவும் சிரமப்பட்டு மாதச் சம்பளம் பெற்று வந்திருக்கிறார்கள். இதனிடையே ஒரு கட்டத்தில் முறையாக சம்பளம் வழங்கப்படாததால் உணவுக்கே சிரமப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது குறித்து அபுதாபி தொழிலாளர் நீதிமன்றம், இந்திய தூதரகம் ஆகியவற்றில் 28 தமிழக கூலித் தொழிலாளர்களும் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
உதவிக்கரம்: இந்நிலையில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த தமிழர்கள் அபுதாபியில் கஷ்டப்படுவதை அறிந்த அபுதாபி அய்மான் சங்கத்தினர் உணவு கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளனர். மேலும் அவர்களை சொந்த ஊருக்கு திரும்ப அனுப்பி வைப்பதற்கான முயற்சிகளை அபுதாபி அய்மான் சங்கத்தினர், அல் அய்ன் இந்திய சமூக மையத்தின் நிர்வாகி முபாரக் முஸ்தபா, தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம் உறுப்பினர் எஸ்.எஸ். மீரான் உள்ளிட்டோர் இந்திய தூதரகம் மூலம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஏஜெண்டை நம்பி ஏமாறக் கூடாது: வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் ஏஜெண்ட்களின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாமல், வேலைக்குரிய விசாவை முறையாக பெற்ற பின்னரே செல்ல வேண்டும் என்பதில் இந்த நிகழ்வு உணர்த்துகிறது. அதேபோல் விசிட் மற்றும் சுற்றுலா விசாவில் சென்று வேலை செய்வதையும் தவிர்க்க வேண்டும். இதனிடையே போலி ஏஜெண்டுகளை கண்டறிந்து அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை கோரிக்கையை அய்மான் சங்கம் விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications