“அல்டிமேட்”.. 300 கிமீ ஸ்பீடு! துபாயில் 3 ஆண்டில் பறக்கும் டாக்சி! நிஜமாகும் பவர் ரேஞ்சர் கனவு உலகம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் 2026 ஆம் ஆண்டிற்குள் பறக்கும் டாக்சி சேவை அறிமுகம் செய்யப்படும் என அந்நாட்டு பிரதமர் அறிவித்து உள்ளார்.
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் 2026 ஆம் ஆண்டிற்குள் பறக்கும் டாக்சி சேவை அறிமுகம் செய்யப்படும் என அந்நாட்டு பிரதமர் அறிவித்து இருக்கிறார். 4 பேர் பயணிக்கும் வகையிலான இந்த டாக்ஸிக்கான கட்டணம் மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது. அறிவியலின் வியக்க வைக்கும் கண்டுபிடிப்பான இந்த பறக்கும் டாக்சியில் செல்ல மக்கள் ஆவலுடன் காத்துள்ளார்கள்.
அருகிலோ அல்லது தொலைவிலோ இருக்கும் பகுதிகளுக்கு சாலையில் செல்ல இருசக்கர வாகனம், கார் போன்றவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பொதுப் போக்குவரத்தை எடுத்துக்கொண்டால் பேருந்து, ரயில் போன்றவை பயன்பாட்டில் உள்ளன.
சாலை மார்க்கமாக செல்லும்போது போக்குவரத்து நெரிசல்களும் அதனால் ஏற்படும் விபத்துகளும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டன. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மெட்ரோ ரயில் போன்றவை அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

பறக்கும் கார்
இது அல்லாமல் வான்வெளி பயணம் மேற்கொள்ள விமானம் அல்லது ஹெலிகாப்டர் போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் விமானத்தை மட்டுமே பொதுமக்களால் எளிதில் பயன்படுத்த முடியும். அதுவும் தொலைதூர பயணங்களுக்கு மட்டுமே இந்த விமான போக்குவரத்தை பயன்படுத்தலாம். இந்த நிலையில் குறுகிய தொலைவு பயணத்திற்கும் வான்வெளியில் செல்லும் வகையில் பறக்கும் கார் கண்டுபிடிக்கப்பட்டது.

மக்களின் ஏக்கம் தீர்க்கும் துபாய்
பல நாடுகளில் சோதனை ஓட்டமாக இந்த பறக்கும் கார் இயக்கப்பட்டாலும் மக்கள் பயன்பாட்டிற்கு அது இன்னும் கொண்டு வரப்படவில்லை. இது எப்போது பயன்பாட்டுக்கு வரும்? நாம் எப்போது அதில் செல்வோம்? என்ற ஏக்கம் நம்மில் பலருக்கும் இருந்திருக்கும். இந்த நிலையில்தான் ஐக்கிய அரபு அமீரக மக்களுக்காக அந்நாட்டு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

3 ஆண்டில் பறக்கும் டாக்சி
அதன்படி துபாய், அபுதாபி உள்ளிட்ட அந்நாட்டின் பெரும் நகரங்களில் இந்த பறக்கும் கார் டாக்சிகளை அறிமுகம் செய்ய உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவித்து இருக்கிறார். துபாயில் தொடங்கிய சர்வதேச மாநாட்டில் 2026 ஆம் ஆண்டு பறக்கும் டாக்சி சேவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அவர் அறிவித்தார்.

விலை குறைவு
கடந்த ஞாயிறு அன்று துபாயில் பறக்கும் டாக்சிகளுக்கான நிலையங்களை அமைக்கவும் அந்நாட்டு அரசு அனுமதி வழங்கி இருந்தது. இந்த பறக்கும் டாக்சிகளில் 4 பைலட்டுகள் மற்றும் 4 பயணிகள் அமர்ந்து பயணிப்பார்கள். இந்த பறக்கும் டாக்சிக்கான கட்டணம் சாதாரண டாக்சியை விட குறைவாக இருக்கும் என்று அந்நாட்டு போக்குவரத்து ஆணைய தலைமை நிர்வாக அதிகாரி அஹமது பஹ்ரொயன் தெரிவித்தார்.

அரசே இயக்கும்
இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் போக்குவரத்துத் துறை ஆணையம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், இந்த பறக்கும் டாக்சி சேவை என்பது துபாய், அபுதாபி உள்ளிட்ட நகரங்களில் தொடங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. நமதூரில் இயக்கப்படும் அரசு பேருந்து, ரயில் சேவைகளை போல் யுஏஇ அரசே இதை பொது போக்குவரத்தாக நடத்துகிறது.

300 கிலோ மீட்டர் வேகம்
தனிநபர்களோ, தனியார் நிறுவனங்களோ இதை பயன்படுத்தினால் வானிலும் டிராபிக் பிரச்சனை ஏற்படும் என்ற காரணத்தால் அரசு மட்டுமே இந்த சேவையை வழங்க இருக்கிறதாம். மின்சாரத்தில் இயக்கும் இந்த பறக்கும் டாக்சி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 240 கிலோ மீட்டர் செல்லும் என்றும், மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

30 நிமிடத்தில் துபாய் - அபுதாபி பயணம்
முதல்கட்டமாக நகரங்களுக்கு இடையேயான பயணத்திற்கு இந்த பறக்கும் டாக்சியை சேவையை தொடங்க உள்ளது ஐக்கிய அரபு அமீரகம். இதன் முதல் பயணம் துபாய் - ஃபுஜைரா ஆகிய நகரங்களுக்கு இடையே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அமலுக்கு வந்தால் 30 நிமிடங்களில் துபாய் - அபுதாபி இடையே சென்று வரலாம் என்று கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications