"இன்னும் என்ன கேப்டன்னே நினைச்சிட்டு இருக்கல்ல நீ.." தப்பு பண்ணிட்டாரே விராட் கோலி!
அபுதாபி: கடும் அலை வீசிக் கொண்டிருக்கும் ஒரு கடல்.. அங்கே பெறும் ஆரவாரத்துடன் பயணித்துக் கொண்டிருக்கிறது ஒரு பிரமாண்ட கப்பல்.. திடீரென, கப்பலை செலுத்திக் கொண்டிருந்த அதன் மாலுமி, "இதற்கு மேல் என்னால் கப்பலைச் செலுத்த முடியாது.." என்று கூறி கப்பலுக்கு உள்ளே கேரம் போர்டு ஆடுவதற்கு உட்கார்ந்தால், மொத்த கப்பல் நிலை என்ன ஆகுமோ அதே போன்ற நிலையில் இப்போது இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி (RCB).
நடப்பாண்டு, பாதி ஐபிஎல் போட்டி தொடர் முடிந்து, மீதி ஐபிஎல் ஆட்டம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. அருமையான தொடக்க ஆட்டங்களை கொடுத்து பெங்களூர் ரசிகர்களே எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றிகளை குவிக்க தொடங்கியுள்ளது ஆர்சிபி.
அபுதாபி நகரத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் அந்த அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது.

கோலி கேப்டன் பொறுப்பு
இந்த நேரத்தில்தான் நேற்று ஆர்சிபி அணி நிர்வாகம் கேப்டன் விராட் கோலி பேசிய ஒரு வீடியோ பதிவை வெளியிட்டது. அதில், இந்த ஐபிஎல் தொடர்தான் பெங்களூர் அணிக்கு கேப்டனாக தான் விளையாடும் கடைசி தொடர் என்று அறிவித்தார் விராட் கோலி. சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து சில நாட்களேயான நிலையில் இப்போது பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பை துறப்பதாக கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார் விராட் கோலி. அதே நேரம் ஐபிஎல் விளையாடும் வரை நான் பெங்களூர் டீமுக்காக மட்டும் தான் ஆடுவேன் என்று உறுதி அளித்துள்ளார்.

கோலிக்காக ஆர்சிபி ரசிகர்கள்
2008 முதல், இத்தனை ஆண்டுகளாக ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாத அணியாக இருந்தாலும், ஆர்சிபி அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு ஈடாக ரசிகர் பட்டாளத்தை பெற்றிருப்பதற்கு காரணம், விராட் கோலி என்ற ஒற்றை ஆளுமைதான். அவர் கேப்டனாக இருப்பதுதான். கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகுவதாக அறிவித்திருப்பது சக வீரர்களுக்கு மட்டுமல்லாது, பெங்களூர் டீம் ரசிகர்களுக்குமே, பெரும் ஏமாற்றம் தான்.

அவசரப்பட்டு விட்டாரா கோலி
இந்த அறிவிப்பை ஐபிஎல் தொடர், தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பாக அறிவித்துள்ளது தான் இன்னொரு கவனிக்கத்தக்க அம்சமாக இருக்கிறது . இந்த தொடர் முடிவடைந்த பிறகு வேண்டுமானால் கோலி, இதை அறிவித்து இருக்கலாம் . ஆனால் அவசரப்பட்டு விட்டார் என்கிறார்கள் கிரிக்கெட் சார்ந்த வல்லுநர்கள்.

கவுதம் கம்பீர்
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் இதுபற்றி கூறுகையில், "விராட் கோலி வெளியிட்ட இந்த அறிவிப்பு ஆர்சிபி அணி நடப்பு சீசனில் கோப்பையை கைப்பற்றுவதற்கு எந்த வகையிலும் உதவி செய்யாது. இந்த தொடர் முடிவடைந்த பிறகு வேண்டுமானால், தேவைப்பட்டால் விராட்கோலி இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கலாம் . இப்போது அவர் இந்த அறிவிப்பு வெளியிட்டிருப்பது அணி வீரர்களின் மனோதிடத்தை குறைத்துவிடும்" என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார் ஆதங்கத்தோடு.

சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து
மூத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுவதற்கு முன்பாக, இனிமேல் இந்திய 20 ஓவர் கிரிக்கெட் அணிக்காக கேப்டன் பொறுப்பை வகிக்கப் போவதில்லை என்று விராட் கோலி அறிவித்தார். இப்போது ஐபிஎல் தொடரிலும் சீசன் முடிவடைவதற்கு முன்பாக அறிவித்துள்ளார். இந்த நேரத்தில் இதை அறிவிக்க வேண்டிய தேவை கிடையாது. இவ்வாறு சஞ்சய் மஞ்சரேக்கர்.

கால நேரம் முக்கியம் பிகிலே
பெங்களூர் அணி கேப்டனாக விராட் கோலி இதுவரை ஒரு கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை. 2013ம் ஆண்டு அந்த அணிக்கு கேப்டன் ஆனார் கோலி. 2016ம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணியை, இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றது தான் கேப்டனாக, அவரது உச்சபட்ச சாதனையாக இருக்கிறது. இந்த தொடர் தோல்விகள் மனதளவில் விராட் கோலியின் பேட்டிங் திறமையை பாதித்து இருக்கும். இந்திய அணியில் அவரது செயல்பாட்டையும் இது பிரதிபலிக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இதற்காக கேப்டன் பொறுப்பை துறப்பது என்று முடிவு செய்துவிட்ட பிறகு உரிய நேரத்தில் அதை அறிவித்து இருக்கலாமே என்பதுதான் முன்னாள் ஜாம்பவான்கள் கேள்வியாக இருக்கிறது. 2008 முதல் தோனி, சிஎஸ்கே கேப்டனாக இருக்கிறார். அதேபோலத்தான் கிரிக்கெட் கேரியர் முடியும் வரை கோலியும், பெங்களூரின் கேப்டனாக இருப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, இது எக்ஸ்ட்ரா ஏமாற்றம்தான்.

குடும்பம் முக்கியம்
அதேநேரம், பெங்களூர் அணியில் விராட் கோலியுடன் விளையாடிய தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், கோலி, கேப்டன் பொறுப்பை தியாகம் செய்தது தப்பு கிடையாது என்று தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் விராட் கோலிக்கு குழந்தை பிறந்துள்ளது, 32 வயதாகும் விராட் கோலி தனது வயதுக்கு ஏற்ப வாழ்க்கையில் சில விஷயங்களுக்கு முக்கியத்துவத்தை மாற்றிக் கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஒரு இளம் குடும்பத் தலைவராக இருக்கும் விராட் கோலிக்கு கேப்டன் பொறுப்பு என்பது மனதளவில் சுமையானது என்று தெரிவித்துள்ளார் டேல் ஸ்டெய்ன்.

எப்படி விளையாடும் ஆர்சிபி?
விராட் கோலி இந்த நேரத்தில் இது போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டது அணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும், என்று பலர் கூறினாலும், அடுத்தடுத்த போட்டிகளில் அந்த அணி எப்படி விளையாடப் போகிறது என்பதில்தான் விமர்சனங்களுக்கு விடை இருக்கிறது. கேப்டனாக கடைசி தொடர் ஆடும் விராட் கோலி கைகளில் கோப்பையை பரிசளிக்க வேண்டும் என்ற உத்வேகம் பிறந்து, வழக்கத்தை விட உற்சாகமாக ஆடி விமர்சனங்களுக்கு முற்றுபுள்ளி வைக்க போகிறார்களா சக வீரர்கள், அல்லது, கோலியே கேப்டன் பொறுப்பை துறந்து விட்டார். நமக்கென்ன என்று தேமே.. என ஆடி சொதப்பப் போகிறார்களா, என்பதெல்லாம் அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications