முற்றும் மோதல்.. அண்ணாமலையின் உருவப்படங்களை தீயிட்டு எரித்த அதிமுகவினர்.. பரபரத்துப்போன அரியலூர்!
எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை பாஜகவினர் தீவைத்து எரித்த நிலையில் இன்று அண்ணாமலையின் உருவப்படத்தை அதிமுகவினர் தீயிட்டு கொளுத்தினர்.
அரியலூர்: அதிமுக-பாஜக தலைவர்கள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இருகட்சி தலைவர்களும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் இன்று அண்ணாமலையின் உருவப்படத்தை அதிமுகவினர் எரித்தனர். நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை பாஜகவினர் எரித்த நிலையில் இன்று அதிமுகவினர் பதிலடி கொடுத்தனர். இதனால் கூட்டணியில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணியில் உள்ளது. இந்த கூட்டணிக்குள் சமீப காலமாக பிரச்சனைகள் இருந்து வருகின்றன. இருப்பினும் ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் சமயத்தில் இந்த கூட்டணி 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை தொடரும் என அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எட்பபாடி பழனிச்சாமி அறிவித்தார்.
இருப்பினும் கூட இருகட்சியினர் இடையே தற்போது வார்த்தை போர் நீடித்து வருகிறது. அதிமுக தலைவர்கள் பாஜகவினரையும், பாஜகவினர் அதிமுகவினரையும் தினமும் வசைப்பாடி வருகின்றனர். இதனால் இந்த கூட்டணி நீடிக்குமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுகவில் இணையும் பாஜகவினர்
அதாவது பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு(ஐடி விங்க்) தலைவர் நிர்மல்குமார் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இவர் மாநில தலைவர் அண்ணாமலையை 420 மை என விமர்சனம் செய்தார். அதன்பிறகு பல பாஜக நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். இது பாஜகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

எச்சரித்த பாஜக
பாஜகவில் விலகுபவர்களை அதிமுகவில் இணைத்து கொள்வது ஏற்கத்தக்கது அல்ல என பாஜகவினர் கருத்து தெரிவிக்க தொடங்கினர். மேலும் அதிமுகவை விமர்சிக்க தொடங்கினர். இதனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‛‛ஒவ்வொரு வினைக்கு எதிர்வினை உண்டு'' என மறைமுகமாக அதிமுகவை விமர்சனம் செய்திருந்தார். இதனால் அதிமுக-பாஜக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு இருப்பது உறுதியானது.

எடப்பாடியின் போட்டோக்கள் எரிப்பு
இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே பாஜக இளைஞர் அணியை சேர்ந்த 4 பேர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை எரித்தனர். கூட்டணி தர்மத்தை மீறி பாஜக நிர்வாகிளை அதிமுக இணைத்து கொள்வதாக குற்றம்சாட்டி இந்த செயலை செய்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இருப்பினும் பாஜகவினரின் இந்த செயல் அதிமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணாமலையின் போட்டோ எரிப்பு
இந்நிலையில் தான் இன்று அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவப்படத்தை அதிமுகவினர் எரித்தனர். 25க்கும் அதிக அதிமுகவினர் ஒன்றிணைந்து இந்த செயலை செய்தனர். கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை எரித்ததை எதிர்த்து அவர்கள் அண்ணாமலையின் உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தினர்.

கைது நடவடிக்கை
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அதிமுகவினரை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்மூலம் தொடர்ந்து அதிமுக-பாஜக கூட்டணியில் கொந்தளிப்பான சூழல் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications