பாஜக - விசிகவினர் இடையே அடிதடி.. 2 நிர்வாகிகளின் மண்டை உடைப்பு.. அரியலூரில் பதற்றம் - போலீஸ் குவிப்பு
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடியில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் இடையே அடிதடி ஏற்பட்டது. இதில் இருவரின் மண்டை உடைந்த நிலையில் பதற்றம் ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமா லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை பொதுமக்கள் ஓட்டு அளிக்கலாம்.

இந்நிலையில் தான் அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் அருகே நரசிங்கபாளையம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்குச்சாவடி மையத்தில் காலை முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று ஓட்டளித்து வருகின்றனர். இந்நிலையில் தான் மதிய வேளையில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்ட பள்ளியின் வளாகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டமாக நின்று வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு பாஜக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது அவர்கள் அங்குள்ள போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் இருகட்சியினரையும் வாக்குச்சாவடி மையத்தின் வளாகத்தில் இருந்து வெளியேறும்படி கூறியுள்ளனர்.
இந்த வேளையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் கைக்கலப்பாக மாறியுள்ளது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நிர்வாகி செல்வக்குமார் மற்றும் பாஜக நிர்வாகி அருண் ஆகியோர் கட்டையை எடுத்து மாற்றி மாற்றி தாக்கியுள்ளனர்.
இதனால் செல்வக்குமார் மற்றும் அருண் ஆகியோரின் மண்டை உடைந்து ரத்தம் வடிந்துள்ளது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் மண்டை உடைந்த 2 பேரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் நரசிங்கபாளையம் வாக்குச்சாவடியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அரியலூர் எஸ்பி சண்முக ராஜ் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இருப்பினும் பதற்றம் தணியவில்லை. இதையடுத்து கூடுதல் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அதன்பிறகு ஓட்டுப்பதிவு மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சம்பவம் நரசிங்கபாளையம் வாக்குச்சாவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications