குறைந்த வாடகைக்கு விவசாய உபகரணம்.. தமிழக அரசின் இ-வாடகை ஆப், உழவன் செயலி சர்ப்ரைஸ்! அரியலூர் அசத்தல்
அரியலூர்: குறைந்த வாடகைக்கு வேளாண் உபகரணம் குறித்த முக்கிய தகவல் ஒன்றை அரியலூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ளார். குறிப்பாக, தனியார் நெல் அறுவடை இயந்திரங்கள் வாடகை பற்றின தகவல்களையும் அதில் தந்துள்ளார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, வேளாண் துறையில், தொழிலாளர்கள் பற்றாக்குறை என்பது தொடர்கதையாகவே நிலவி வருகிறது.. அதுமட்டுமல்ல, விதைப்பு முதல் அறுவடை முடிய அனைத்து சாகுபடி பணிகளையும் வேளாண் இயந்திரங்கள் மூலமாக மேற்கொள்வதற்காக முனைப்பு காட்டி வருகிறது என்றாலும், ஏராளமான விவசாயிகளுக்கு சொந்தமாக வேளாண் கருவிகள் கிடையாது.

இ-வாடகை: எனவேதான், வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் தங்களுடைய வீட்டிலிருந்தபடியே, ஆன்லைனில் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளும் "இ-வாடகை" என்ற செயலியை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இந்த ஆப் மூலம் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்படுகின்றன. அதேபோல, கடந்த 2018 -ல் "உழவன் செயலி" அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செயலியில் 22 வகையான சேவைகள் கிடைக்கின்றன
விதைகள்: பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், வானிலை முன்னறிவிப்பு, தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மானிய திட்டங்கள், விளைச்சல் அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் போன்று பல்வேறு இடங்களுக்கு சென்று தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களையும் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைப்பதற்கான வழிமுறைகளையும் வழங்குவதே இந்த உழவன் செயலியின் குறிக்கோளாகும்.
https://www.tnagrisnet.tn.gov.in அல்லது https://tnhorticulture.tn.gov.in அல்லது https://aed.tn.gov.in இணையதளம் மூலமாகவும் திட்டம் பற்றிய விபரங்களை விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம்..
இப்படிப்பட்ட சூழலில், அரியலூர் மாவட்ட விவசாயிகள் உழவர் செயலி மூலம் முன்பதிவு செய்து வேளாண் இயந்திரங்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1160க்கு பெறலாம் வாடகைக்கு பெற்று பயன்பெறலாம் என்று கலெக்டர் அதிரடியாக அறிவித்திருக்கிறார்..
இயந்திரங்கள்: இதுகுறித்து, அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பில், "அரியலூர் மாவட்டத்தில், தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை தொகையினை முத்தரப்பு கூட்டம் வாயிலாக நிர்ணயம் செய்து செயல்படுத்திட பிப்ரவரி 5 அன்று அரியலூர் மாவட்ட கலெக்டர் முத்தரப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
மேற்படி கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் தனியார் நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்ததன் அடிப்படையில் பெல்ட் டைப் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு மணி ஒன்றுக்கு வாடகையாக ரூ2500 எனவும், டயர் டைப் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு மணி ஒன்றுக்கு வாடகையாக ரூ.1850 எனவும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அறுவடை இயந்திரம்: நிர்ணயம் செய்யப்பட்ட வாடகைத் தொகைக்கு மிகாமல் விவசாயிகளிடமிருந்து வசூல் செய்து கொண்டு அறுவடை இயந்திர உரிமையாளர்கள் இயந்திரங்களை பணியில் ஈடுபடுத்தி ஒத்துழைப்பு நல்க வேண்டும். இதில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் தருணத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் வேளாண் துறையினை அணுக வேண்டுமென்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அரியலூர் வேளாண்மைப் பொறியியல் துறையில் இரண்டு எண்கள் பெல்ட் டைப் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1880 எனவும், 1 எண் டயர் டைப் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1160 என்ற வாடகையில் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
வழிமுறைகள்: மேலும் உழவர் செயலியில் தனியார் அறுவடை இயந்திர உரிமையாளர்களின் விவரங்களை விவசாயிகள் அறிந்து பயன்பெறுவதற்கான வழிமுறைகள் கீழ்க்கண்டவாறு விளக்கப்பட்டுள்ளது.
- உழவர் செயலியை திறக்கவும்: ஒருமுறை பதிவிற்கான தங்களது சுயவிவரங்களை பதிவு செய்யவும் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு என்ற மெனுவை கிளிக் செய்யவும்.
- தனியார் இயந்திர உரிமையாளர் பற்றி அறிய என்ற மெனுவை கிளிக் செய்யவும்.
- விவசாயிகளுக்கு தேவையான தனியார் அறுவடை இயந்திரங்கள் என்ற மெனுவை கிளிக் செய்யவும்.
- விவசாயிகள் தங்கள் மாவட்டம் மற்றும் வட்டாரத்தை தேர்வு செய்து, தேடுக (Search)ஐக் கிளிக் செய்து உடன் தனியார் உரிமையாளரின் விவரங்கள் தோன்றும்.
நெல் அறுவடை: அதில் தாங்கள் விரும்பும் தனியார் அறுவடை இயந்திர உரிமையாளர்களின் அலைபேசி எண்ணை கிளிக் செய்தால் அவ்வுரிமையாளரின் அலைபேசிக்கு நேரிடையாக அழைப்புசெல்லும். உரிமையாளருடன் அலைபேசி மூலம் கலந்துரையாடி அவர்களின் நெல் அறுவடை இயந்திரத்தினை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் தேவை ஏற்படின் பிற மாவட்டங்களில் உள்ள இயந்திர உரிமையாளர்களை தொடர்பு கொண்டும் பயன்பெறலாம்" என மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications