அரியலூரில் 16 வயது பள்ளி மாணவனுக்கு பிறந்தநாள் அன்றே இப்படியா ஆகனும்.. கலங்கி நிற்கும் பெற்றோர்
அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் நகுலன். 16 வயதாகும் நகுலன் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நகுலனுக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். இவர் நண்பர்களுடன் ஏரியில் குளிக்க சென்றுள்ளார். நீச்சல் தெரியாமல் ஏரியில் குளித்த நகுலன் பரிதாபமாக மூழ்கி உயிரிழந்தார்.
ஆறு, குளம், ஏரிகள் வடகிழக்கு பருவ மழையால் நிரம்பி உள்ளன. பலரும் தங்கள் பகுதியில் உள்ள ஆறு, ஏரி, குளங்களில், அருவிகளில் குளிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவ மாணவிகள் குளிக்க செல்கிறார்கள். அப்படி செல்லும் குழந்தைகள் நீச்சல் தெரியாமல் உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. நீச்சலே தெரிந்தாலும் சில சமயங்களில் வெள்ளம் மற்றும் பாறைகள், சேறுகள் காரணமாக சிக்கி இறந்து போகிறார்கள். அரியலூர் ஜெயங்கொண்டத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காமராஜபுரம் பகுதியை சேர்ந்த 16 வயதாகும் நகுலன், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவர் நகுலனுக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். இதனை கொண்டாடும் விதமாக, கொம்மேடு செல்லும் பாதையில் உள்ள பிள்ளை ஏரியில் தனது நண்பர்களுடன் நகுலன் குளித்துக்கொண்டிருந்தாராம். இதில் நீச்சல் தெரியாத நகுலன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். சுமார் இரண்டரை மணி நேர தேடுதலுக்கு பின்னர் நகுலனின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் மாணவர் நகுலனின் உடல் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிறந்த நாளிலேயே மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இன்னொரு சம்பவம்: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஆத்தங்கரை விடுதி கிராமத்தை சேர்ந்த 12 வயதாகும் அஸ்வின் என்ற மாணவர், அதே கிராமத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரன் (9) அங்குள்ள பள்ளியில் படித்து வந்தனர். அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்ட நிலையில் நேற்று மாலை 2 மாணவர்களும் அப்பகுதியில் விளையாடினார்கள். அப்போது அப்பகுதியை சேர்ந்த முத்துகுமார் என்பவரின் வீட்டின் அருகே கொட்டகை அமைப்பதற்காக தோண்டப்பட்ட 5 அடி பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் 2 பேரும் தவறி விழுந்துள்ளார்கள்.
இந்தநிலையில் வெகுநேரமாகியும் 2 பேரும் வீட்டிற்கு வரவில்லை.. இதனால் உறவினர்கள் அப்பகுதியில் தேடிபார்த்தனர். அப்போது 2 மாணவர்களும் பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி கிடந்தனர் . இதை கண்டு உறவிர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் மீட்டு பார்த்த போது அவர்கள் ஏற்கனவே இறந்து கிடந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கறம்பக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் அதிக அளவில் தேங்கி உள்ளதால், ஆறு குளத்தில் குழந்தைகளை குளிக்க அனுமதிக்காமல் இருப்பது நல்லது.












Click it and Unblock the Notifications