முதுகில் குத்திய 2 உத்திகள்.. கர்நாடகாவில் பாஜக தோல்விக்கு காரணம் என்ன? காலியான தென்னிந்திய தாமரை
பெங்களூர்: கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்து இருப்பதற்கு, அக்கட்சி மேற்கொண்ட 2 முக்கிய நகர்வுகள் காரணம் என்று கூறப்படுகிறது. அந்த 2 நகர்வுகள் என்ன? விரிவாக பார்ப்போம்.
தென்னிந்தியாவில் பாஜக ஆளும் ஒரே மாநிலமான பாஜக, நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் வெறும் 65 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று, ஆட்சியை பறிகொடுத்து இருக்கிறது. கர்நாடகாவில் பாஜகவின் இந்த படுதோல்விக்கு அக்கட்சி இந்த தேர்தலுக்காக மேற்கொண்ட 2 முக்கிய நகர்வுகள் காரணமாக கூறப்படுகிறது.
அதில் முதலாவது, கர்நாடகாவில் பெரும் அளவில் வசித்து வரும் லிங்காயத்து சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களின் ஆதரவை நாடி இருக்காமல் அவர்களை ஓரம்கட்ட முயன்றது. கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவும் லிங்காயத்து சமூகத்தை சேர்ந்தவர்தான். இவரையும் பாஜக ஓரம்கட்டிவிட்டதாகவே அந்த சமூக மக்கள் புரிந்துகொண்டு இருக்கிறார்கள்.

எடியூரப்பா காலத்திலும், கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலிலும், 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவின் வெற்றிக்கு காரணமாக கூறப்படுவது லிங்காயத்து மக்கள்தான். ஆனால், இந்த 2023 தேர்தலுக்கு முன் கர்நாடகாவில் லிங்காயத்துகளுக்கு எதிராக பாஜகவை சேர்ந்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
லிங்காயத்து மட சாமியார்கள் கர்நாடகாவில் கைது செய்யப்படது, அவர்களை ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேசியது போன்றவை அவர்களின் அரசியல் நிலைபாட்டையே மாற்றின. தேர்தலுக்கு முன் லிங்காயத்துகளை கவர இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை பறித்து லிங்காயத்துக்கு கூடுதல் சதவீதம் வழங்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் இதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததால் செயல்படுத்த முடியவில்லை.
இந்த நடவடிக்கையும் லிங்காயத்துகளை திருப்திபடுத்தவில்லை. தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ்-ஐ விட அதிக லிங்காயத்துகளை பாஜக போட்டியிட வைத்தும் அக்கட்சிக்கு குறைவான வாக்குகளே விழுந்து உள்ளது. இரு கட்சிகளின் லிங்காயத்து வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டியில் காங்கிரஸ் கட்சிக்கு 15 வேட்பாளர் அதிகம் கிடைத்து உள்ளனர். பாஜகவை பொறுத்தவரை 2018 தேர்தலை ஒப்பிடுகையில் இம்முறை 13 தொகுதிகள் குறைவாக பெற்று இருக்கிறது.
பாஜகவின் வீழ்ச்சி காரணமாக கூறப்படும் 2 வது உத்தி என்னவென்றால் செல்வாக்கு இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு மறுத்துவிட்டு புதியவர்களை தேர்தலில் நிறுத்தியதாகும். இம்முறை 50க்கும் அதிகமான புதிய வேட்பாளர்களை பாஜக களமிறக்கியது. அதேபோல், பழைய பாஜக நிர்வாகிகளை ஓரம்கட்டிவிட்டு காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவியவர்களுக்கு சீட் வழங்கியது.
பாஜகவின் இந்த உத்தி குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் அதற்கு கைகொடுத்தது. ஆனால், கர்நாடகா தென் இந்தியாவில் அல்லவா உள்ளது. இங்கு மக்கள் பாஜகவை கைவிட்டனர். இந்த முறை பாஜகவால் வாய்ப்பு மறுக்கப்பட்ட அக்கட்சி எம்.எல்.ஏக்கள் சுயேட்சைகளாகவும், காங்கிரஸோடும் சேர்ந்துகொண்டதால் பாஜகவின் வாக்குகள் பிரிந்து பெரும் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதால் பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் எதிர்ப்பை அக்கட்சி சம்பாதித்தது. உதாரணத்துக்கு பாஜகவின் தீவிர செயற்பாட்டாளரான அருண் குமார் புதிலா, புத்தூர் தொகுதியில் சீட் கிடைக்காமல் சுயேட்சையாக போட்டியிட்டு பாஜகவை விட அதிகமாக 60,000 வாக்குகளை பெற்றார். பாஜக வாக்குகள் சிதறியதால் அந்த தொகுதியில் காங்கிரஸ் வென்றது.












Click it and Unblock the Notifications