தாலி கட்டிய 2வது நிமிடம் கணவனை இழந்த மனைவி! மாரடைப்பால் சரிந்த மாப்பிள்ளை.. கர்நாடகாவில் சோகம்
பெங்களூர்: நமது நாட்டில் சமீப காலமாகவே திடீர் திடீரென இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே கர்நாடகாவின் ஜம்கண்டி நகர் என்ற பகுதியில் திருமணத்தில் தாலி கட்டிய சில நிமிடங்களில் இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
முன்பெல்லாம் மாரடைப்பு என்பது வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களிடம் தான் அதிகம் ஏற்படும். ஆனால், சமீப காலமாகவே இளைஞர்கள், அவ்வளவு ஏன் சின்ன சின்ன குழந்தைகள் மத்தியிலும் கூட மாரடைப்பு ஏற்படுகிறது. இதற்குத் தெளிவான காரணங்கள் இதுவரை தெரியவில்லை. இருப்பினும், கொரோனாவுக்கு பிறகு இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கர்நாடகாவில் ஷாக்
அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் கர்நாடகாவில் நடந்துள்ளது. அங்குத் திருமண மேடையிலேயே இளைஞர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. திருமணப் பந்தத்தில் அப்போது தான் பெண்ணுக்கு அந்த இளைஞர் தாலி கட்டியிருந்தார். திருமண சடங்குகள் நடந்து வந்த நிலையில், சிறிது நேரத்திலேயே 25 வயதான அந்த இளைஞன் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.
கர்நாடகாவின் பாகல்கோட்டின் ஜம்கண்டி நகரில் நேற்று சனிக்கிழமை நடந்த திருமணத்தில் தான் இந்த சோகம் ஏற்பட்டது. உயிரிழந்த அந்த இளைஞர் 25 வயதான பிரவீன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தாலி கட்டிய சில நிமிடங்களிலேயே அவர் நெஞ்சு வலிப்பதாகக் கூறியிருக்கிறார். உடனடியாக சில நிமிடங்களில் நெஞ்சு வலி அதிகரிக்கவே பிரவீன் அப்படியே சரிந்தார். முதலில் அங்கிருந்தவர்களுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.
உயிரிழப்பு
பிறகு சுதாரித்துக் கொண்டவர்கள் உடனடியாக பிரவீனை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு பிரவீனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. திருமணத்தின் போதே மணமகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. தாலி கட்டிய சில நிமிடங்களில் கணவனை இழந்த அந்த இளம்பெண் கதறி அழுதார். இது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
முதல்முறை இல்லை
அதேநேரம் இந்தியாவில் சமீப காலமாக இளைஞர்களிடையே மாரடைப்பு சம்பவம் அதிகரித்து வருகிறது. இதுபோல நல்ல உடல்நிலை இருக்கும் இளைஞருக்கு மாரடைப்பு ஏற்படுவது இது முதல்முறை இல்லை. கடந்த பிப்ரவரி மாதம் மத்தியப் பிரதேசத்தில் திருமணத்தின் போது சங்கீத விழாவில் 23 வயது பெண் ஒருவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மேடையிலேயே இறந்தார்.
அதேபோல கடந்த டிசம்பரில், உத்தரப் பிரதேசத்தின் அலிகரில் உள்ள தனது பள்ளியில் விளையாட்டுப் போட்டிக்காகப் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது 14 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்
இதுபோல இளைஞர்கள், குழந்தைகளிடையே மாரடைப்பு ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்தே வருகிறது. இதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், இந்த நவீன காலத்தில் உடல் உழைப்பு என்பது மிகவும் குறைந்துபோய்விட்டது. எல்லாம் விரல் நுனியில் இருக்கிறது. மொபைலை தட்டினால் அனைத்தும் வீட்டிற்கே வந்துவிடுகிறது. இதனால் உடல் உழைப்பு இல்லாமல் போனதும் மாரடைப்பு அதிகரிக்கக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications