கொரோனா வைரஸ் பாதித்த குடும்பத்தை பேட்டி எடுத்த 4 செய்தியாளர்கள்.. தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு
பெங்களூரு: இந்தியாவில் கொரோனா வைரஸால் முதல் முதலாக இறந்த முதியவரின் குடும்பத்தினரை நேர்காணல் செய்த 4 செய்தியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா தாக்கியிருக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் கலபுராகியைச் சேர்ந்த 76 வயது முதியவர் ஹைதராபாத்தில் இருந்து சிகிச்சை முடிந்து திரும்பும் போது உயிரிழந்தார். ஆனால் முன்னதாக அந்த முதியவர் சவுதி அரேபியாவில் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 29ம் தேதி வரை இருந்தார். பிப்ரவரி 29ம் தேதி ஹைதராபாத் வந்தவர் அங்கிருந்து கர்நாடகா மாநிலம் கலபுராக்கிக்கு பயணம் செய்தார்.

அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு இருந்தது. ஆனால் முடிவுகள் வரும் முன்பே அவரை அவரது குடும்பத்தினர் ஹைதராபாத்திற்கு உயர் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற அவர் மீண்டும் கலபுராக்கி திரும்பினார். வரும் வழியில் தான் உயிரிழந்தார்.
இதையடுத்து இறந்த முதியவரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனாவால் இறந்த முதல் இந்தியர் இவர் தான்என்பது உறுதியானது.
இந்நிலையில் இவரது குடும்பத்தினரை சோதனைக்கு பின்னர் நான்கு ஊடகவியலாளர்கள் சந்தித்து நேர்காணல் செய்திருந்தார்கள். இதையடுத்து நான்கு செய்தியாளர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முதியவரின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரவி வருவதால், அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நான்கு செய்தியாளர்களையும் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 68 வயது பெண் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். இதன்படி இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். 107 சிகிச்சை பெற்று வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications