என்னப்பா இது தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை.. மேற்கு வங்கத்தில் புதிய அரசு வந்ததும் புது விமான நிலையம்!
மேற்கு வங்கத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதும், பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த கொல்கத்தா இரண்டாவது விமான நிலையத் திட்டம் உயிர்பெற்றுள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் புதிய அரசு வந்ததும், நடைபெற்று வந்த விமான நிலையத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த முரண்பாடு தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேற்கு வங்கத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு, தனது முதல் பட்ஜெட் அறிக்கையிலேயே கொல்கத்தாவுக்கு அருகிலுள்ள கல்யாணி பகுதியில் புதிய பசுமை வழி சர்வதேச விமான நிலையம் அமைக்க அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் முந்தைய திரிணாமுல் காங்கிரஸ் அரசு காலத்தில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களால் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

தற்போது புதிய அரசு இந்த திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. இது கொல்கத்தா நகரத்தின் விமான போக்குவரத்து நெரிசலை பெருமளவு குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலீடுகளை ஈர்ப்பதில் நீண்ட காலமாக சவால்களை சந்தித்து வந்த மேற்கு வங்கம், புதிய அரசு பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே பொருளாதாரம் மற்றும் வர்த்தக சந்தையை மீட்டு எடுக்க மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
கல்யாணி விமான நிலையத்தின் முக்கிய அம்சங்கள்
இந்த புதிய விமான நிலையம், தற்போதைய டம்டம் விமான நிலையத்திலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கல்யாணி பகுதியில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பின்புறம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு சுமார் 1,000 முதல் 1,500 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
முதற்கட்ட மண் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் திட்டத்தை விரைவாக முன்னெடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால், டம்டம் விமான நிலையத்தின் பயணிகள் நெரிசல் கணிசமாக குறையும்.
மாநிலத்தின் பிற பகுதிகளிலும் மேம்பாடு
புதிய பட்ஜெட்டில் கொல்கத்தா மட்டுமின்றி மேற்கு வங்கத்தின் பிற பகுதிகளிலும் விமான போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக புருலியா, பலூர்காட், மால்டா ஆகிய இடங்களில் புதிய விமான ஓடுதளங்கள் அமைக்கப்பட உள்ளன.
கூச் பெஹார் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ராணுவ பயன்பாட்டிற்காக ஹாஷிமாரா மற்றும் கலைகுண்டா விமானப்படை தளங்களை விரிவாக்க கூடுதல் நிலம் வழங்கவும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது ஏன் முக்கியம்?
ஒரு மாநிலத்தில் புதிய அரசு வந்ததும், பல ஆண்டுகளாக தாமதமான திட்டம் உடனடியாக தொடங்கப்படுகிறது. அதே நேரத்தில் மற்றொரு மாநிலத்தில் நடைபெற்று வந்த திட்டம் நிறுத்தப்படுகிறது. இந்த முரண்பாடு, மாநில அரசுகளின் முன்னுரிமை மற்றும் கொள்கை வேறுபாடுகளை பிரதிபலிக்கிறது.
தவெக அரசு தமிழ்நாட்டில் ஊழலை ஒழித்துள்ளதாக கூறப்பட்டாலும், இது பல இடத்திலும், பல துறையிலும் வெளிப்படையாக தெரிந்தாலும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களும், கொள்கைகளும் இன்னும் முடங்கியே உள்ளது. விஜய் சட்டசபையில் பேசுவது போல அதிரடியாக முதலீட்டை ஈர்ப்பதிலும், வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதிலும் காட்ட வேண்டும் என்பது தான் பலரின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் பரந்தூர் விமான நிலைய திட்டம் தவெக அரசால் மொத்தமாக கைவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், சென்னைக்கு 2வது விமான நிலையம் தேவை என்பதை யாரும் மறுக்கவில்லை, மறுக்கவும் முடியாது.
மேற்கு வங்கத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படுவது, அம்மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் உதவும். அதே நேரத்தில் தமிழ்நாட்டில் திட்டம் நிறுத்தப்பட்டதால், மாநிலத்தின் விமான போக்குவரத்து மேம்பாடு தாமதமாகும்.












Click it and Unblock the Notifications