"ஸ்கூலா.. மினி ஷூட்டிங் ஸ்பாட்டா?".. விஜயை வெளுத்து வாங்கிய வானதி சீனிவாசன்
சென்னை: காஞ்சிபுரம் அருகே பள்ளி மாணவர்கள் பள்ளி நேரத்தில் முதலமைச்சர் விஜயின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வெளியாகியுள்ள தகவலுக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களை அரசியல் நிகழ்வுகளுக்கு பயன்படுத்தும் நடைமுறையை தவெக கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: காஞ்சிபுரம் அருகே உள்ள ஜெ.ஜெ. நகர் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பள்ளி நேரத்தில் அருகில் தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலமைச்சர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் செய்தியானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பள்ளிகளில் ரீல்ஸ், அரசு நிகழ்ச்சிகளில் டான்ஸ், உச்சபட்சமாக பள்ளி மாணவர்களிடம் தவெக தலைவர் விஜய் சாங்ஸ் என கல்விக் கூடங்களை, அரசு நிகழ்ச்சிகளை ஒரு மினி ஷூட்டிங் ஸ்பாட்டுகளாக மாற்றி அரசியல் செய்வது தான் தவெகவின் கொள்கையா? பேட்டிகளில் திறமையாகப் பேசி மழுப்பும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இது போன்ற செயல்களுக்கு என்ன பதில் கூறப்போகிறார்?.
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல்தான் உள்ளது தவெக அரசின் செயல்பாடுகள். இன்னும் சற்று லோக்கலாக திரைப்பட வசன பாணியில் சொல்லப் போனால் "அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்..!" என்று கூறும் வகையில் கட்சி நிர்வாகிகளிடம் இதுபோன்ற செயல்களை செய்யாதீர்கள் என்று அறிவுறுத்தப்பட்ட பிறகும் கூட தொடர்வது எந்த வகையில் நியாயம் தவெக தலைவர் விஜய்யே?.
தொடர்ந்து பள்ளிச் சிறார்களை டார்கெட் வைத்து அரசியல் செய்யும் இந்த வழக்கத்தை விட்டொழிக்க தவெக தலைவர் விஜய் தனது கட்சி நிர்வாகிகளுக்கு கடுமையாக அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications