பெங்களூரில் கழிவுநீர் குழாய் முறைகேடு! ராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ் அதிரடியால் அரசுக்கு வந்த 100 கோடி
பெங்களூர்: பெங்களூரில் சட்ட விரோதமாக கழிவுநீர் குழாய் இணைப்பு ஏற்படுத்தியவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் மேலாண்மை வாரியம் ஈடுபட்டுள்ளது. இந்த வாரியத்தின் தலைவரும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவருமான ராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ், இதற்கான இந்த அதிரடி நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளார். இதுவரை ரூ.100 கோடி ரூபாய் அபராத தொகையாக பெறப்பட்டுள்ளது.
பெங்களூரில், முறையாக அனுமதியின்றி சட்ட விரோதமாக கழிவு நீர் குழாய் இணைப்பை ஏற்படுத்தியிருந்த குடியிருப்புவாசிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சட்ட விரோத இணைப்பு வைத்து இருந்தவர்களிடம் இருந்து அபராதம் மற்றும் சேவைக்கட்டணமாக வசூல் செய்யப்பட்ட அபராத தொகை மட்டும் ரூ.100 கோடியை தாண்டியுள்ளது. முதல்கட்டமாக, 49,903 இணைப்புகளை ஆய்வு மேற்கொண்டதில் 5,645 இணைப்புகள் சட்ட விரோதமாக இருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து இதுபோன்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறினர்.
அனுமதியில்லாத இணைப்புகள் மற்றும் கழிவுநீரை முறையாக கையாளாதது ஆகியவை பெங்களூர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்திற்கு பெரும் சவாலாக மாறுகிறது. கழிவுநீர் மேலாண்மையில் இது பெரும் சிக்கலாக மாறுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அண்மையில், ஆர்கே ஹெக்டே நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் கழிவு நீர் இணைப்பானது, புதிய காவிரி நீர் பைப்லைனுடன் இணைக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்தனர்.
புதிய பைப்பலைனை குடிநீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் பரிசோதனை செய்ததில் இந்த சட்ட விரோத இணைப்பு கண்டறியப்பட்டது. வாரிய தலைவர் ராம் பிரசாத் மனோகர் இது தொடர்பாக கூறுகையில், "சட்ட விரோத இணைப்புகளும் மழை நீரை கழிவு நீர் அமைப்புக்குள் விடுவதும் உள்கட்டமைப்பில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்துகிறது.
இதனால் சாலைகளில் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சட்டவிரோத இணைப்புகளை கண்டறியும் பணியை தொடங்கினோம்.
முதல் கட்ட ஆய்வில் கண்டறியப்பட்ட 5,645 சட்ட விரோத இணைப்புகளில் 1,635 இணைப்புகள் உரிய அபராதம் மற்றும் கட்டணம் வசூலிக்கப்பட்டு ஒழுங்குமுறப்படுத்தப்பட்டது. இந்த தொகை மூலதன செலவுகளுக்கு பயன்படுத்தப்படும்.
சட்ட விரோத இணைப்புகளை ஒழுங்குபடுத்தும் பணி தற்போது தொடங்கியுள்ளது. காவிரி நீர் இணைப்பு வைத்து இருக்கும் குடியிருப்பு வாசிகள், கழிவு நீர் இணைப்பு பெற தனியாக கட்டணம் செலுத்தி பெற வேண்டும். காவிரி நீர் இணைப்பு பெறாதவர்கள் தாமாக முன்வந்து விண்ணப்பிக்கலாம். எத்தனை இணைப்புகள் உள்ளதோ அதன் அடிப்படையில் பைப்லைன்கள் மேம்படுத்துதல், மேன்ஹோல் அமைத்தல் கழிவு நீர் மேலாண்மைக்கு எஸ்.டி.பி கட்டுதல் ஆகிய பணிகள் செய்யப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications