பெங்களூருவில் ஒரே பள்ளியில் 60 மாணவர்களுக்கு கொரோனா.. 14 பேர் தமிழர்கள்.. அக். 20 வரை பள்ளி மூடல்!
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் ஒரே பள்ளியில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 60 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த பள்ளி வரும் அக்டோபர் 20-ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த 60 பேரில் 14 பேர் தமிழர்கள் ஆவர்.
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 539 பேர் புதிதாக நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை 29,75,067 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 17 பேர் பலியாகிவிட்டனர்.
தட்சின கன்னடா மாவட்டத்தில் மட்டும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி அந்த மாவட்டத்தில் டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட்டானது 1.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தியேட்டர்கள்
இந்த மாவட்டத்தில் சினிமா தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் அரங்குகள், ஆடிடோரியம்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் திறக்கப்பட்டது. இவற்றில் 50 சதவீத இருக்கை வசதிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆங்காங்கே கர்நாடகாவில் தடுப்பூசி போடும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மக்கள் அதை பயன்படுத்தி வருகிறார்கள்.

1 முதல் 8
ஏற்கெனவே 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை கடந்த 23 ஆம் தேதி முதல் திறக்கப்பட்ட நிலையில் டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் 2 சதவீதத்திற்கு அதிகமான பள்ளிகளை தவிர, கர்நாடகாவில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. அதில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், உள்ளிட்டோர் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டன. மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றை பின்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

500 மாணவர்கள்
இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் 500 மாணவர்கள் படித்து வந்தனர். விடுதியில் தங்கி படித்து வந்த மாணவர் ஒருவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை அந்த மாணவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.

ஆசிரியர்கள்
இதையடுத்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 60 மாணவர்களுக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. அவர்களில் இருவருக்கு மட்டும் அறிகுறிகள் உள்ளன. இதையடுத்து அந்த இருவர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உண்டு உறைவிடப் பள்ளி
மற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உண்டு உறைவிடப் பள்ளி என்பதால் பெற்றோர் கொரோனா பாதிக்காத மாணவர்களை வீட்டுக்கு அழைத்து செல்ல அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் வரும் அக்டோபர் 20ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட 60 மாணவர்களில் 14 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

செப்டம்பர் 1 முதல்
தமிழகத்திலும் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் திறக்க அரசு அறிவித்துள்ளது. எனினும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை முதலில் திறந்த பின்னர் 1 முதல் 5 ஆம் வகுப்புகளை திறக்கலாம் என கோரிக்கைகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் 60 பேருக்கும் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி மறு கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.












Click it and Unblock the Notifications